Friday, April 12, 2024

‘சக்ரா’ படத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கும் விஷால்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷாலின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘சக்ரா’ திரைப்படத்தில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து பல வசனங்கள் இருக்கின்றன. சென்சாரில் இவை எப்படி தப்பித்தன என்பது பற்றி ஆச்சரியமாக உள்ளது.

ஒரு காட்சியில் ஏடிஎம்-மின் காவலாளியை ஒரு இளைஞன் தாக்குவான். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் விஷால், அந்த இளைஞனை பதிலுக்குத் தாக்குகிறார். பின்பு அன்றைய செய்தித் தாளை எடு்த்து அதில் தலைப்புச் செய்திகளாக இருப்பதைப் படிக்க வைக்கிறார்.

அதில் ‘ஸ்விஸ் வங்கியில் உள்ள 900 கோடி கருப்புப் பணத்தை மீட்பேன்-பிரதமர் உறுதி’, ‘வங்கிக் கடனை ரத்து செய்யாததால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை..’, ‘சாலை விரிவாக்கத்திற்காக 10000 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல்..’ போன்றவைகளை தலைப்புச் செய்திகளாகப் படிக்கிறான் அந்த இளைஞன்.

படித்து முடித்தவுடன் “இதெல்லாம் நடந்துச்சா.. இல்லீல்ல.. உன்னால இதையெல்லாம் எதிர்த்துப் போராட முடியுமா.. கேள்வி கேட்க முடியுமா.. முடியாது.. ஏன்னா அவங்க திருப்பியடிப்பாங்க. ஆனால் இந்த வயதான காவலாளி அடிக்க மாட்டார். அதுனால நீ அவரைத் திருப்பி அடிக்கிற..!” என்று லெக்சர் கொடுக்கிறார் விஷால்.

இன்னொரு இடத்தில் “திருக்குறளை எழுதியவர் பெயரைத் தப்பா சொன்னால்கூட தப்பில்லைன்ற மாதிரி ஆயிப் போச்சு…” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நைஸாகக் கிண்டலடித்திருக்கிறார்.

மேலும் காவல் துறையினர் சின்ன வழக்குகளில் மட்டும் முனைப்புடன் செயல்பட்டு அப்பாவிகளை பிடித்து அடிப்பதும், பெரிய வழக்குகளில் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

கார்பரேட் நிறுவனங்கள் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஜால்ரா போட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதாகவும் குற்றம் சாட்டிப் பேசியுள்ளார்.

“ஆன்லைனில் மக்கள் பகிரும் தகவல்கள் அனைத்தும் திருடப்படுகிறது. மற்றவர்களுக்கு காசுக்கு விற்கப்படுகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியா” என்றும் கிண்டல் செய்திருக்கிறார்.

இதுபோக ரோபோ சங்கர்கூட தனக்குக் கிடைத்திருக்கும் நேரத்தில் “எங்க தொகுதி எம்.எல்.ஏ.வை 5 வருஷமா காணோம்.. அவரையும் தேடிக் கண்டு பிடிக்க முடியுமா…?” என்று கிண்டல் செய்கிறார்.

இது எல்லாவற்றையும் தாண்டி பிரதமர் நரேந்திர மோடி போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவரை திருடர்கள் இருவர் தாக்கி அவரது வீட்டில் இருந்த பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வதாகவும் காட்சிகளை அமைத்துள்ளார்.

ஆக மொத்தத்தில் விஷாலின் அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் படமாகவும் இந்த ‘சக்ரா’ திரைப்படம் அமைந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News