பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த், ரோஜா, மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்து 1996-ல் வெளியான படம் தமிழ் செல்வன்.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சம்பவத்தை, கதாசிரியர் ரத்னகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
“படப்பிடிப்பு கார்நாடகாவில் நடைபெற்று வந்தது. இரவு ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்தோம்.
அப்போது காவிரி பிரச்னை தொடர்பாக விஜயகாந்த் பேசிய கருத்து கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் படப்பிடிப்பு இங்கு நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன், கர்நாடாகத்தில் அதி தீவிரமாக அரசியல் பேசும் வட்டாள் நாகராஜ் என்பவர் தலைமையில் சுமார் 50 பேருடன் கெஸ்ட் ஹவுஸில் வந்து இறங்கி கோஷம்போட தொடங்கிவிட்டனர். ‘தமிழ்ச்செல்வன் என்ற பெயரில் இங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது’ என்று கத்தினர்.
இதை பார்த்து இயக்குனர் பாரதிராஜா, இதுக்கெல்லாம் ரெஸ்பாஸ் பண்ண வேண்டாம் என்று சொல்லி ரூமுக்கு சென்றுவிட்டார். ஆனால் விஜயகாந்த் எழுந்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தனது டிரைவரை அழைத்து கார் டிக்கியை திறக்க சொன்னார். அதில் பல இரும்பு ராடுகள் இருந்ததது. அதை எடுத்துக்கொண்டு விஜயகாந்த் கெஸ்ட் ஹவுஸ் கேட்டை நோக்கி நடந்து சென்றார்.
இவர் வருவதை பார்த்த வட்டாள் நாகராஜ் கோஷ்டி அவர் கேட்டுக்கு பக்கத்தில் வருவதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். ஆனாலும் விஜயகாந்த் கேட் வரைக்கும் சென்று மதுரை மொழியில் சத்தம்போட்டு விட்டு வந்தார். அப்போதுதான் அவரின் ரியக் ஆக்ஷனை பார்த்தேன். அடுத்த நாள் படப்பிடிப்பில் இயக்குனர் பாரதிராஜா தமிழ் செல்வன் என்ற பெயரில் கிளாப் போர்டு அடிக்க மாட்டேன் படத்தின் பெயரை மாற்றுங்கள் என்று சொல்லிவிட்டார்.
ஆனால் விஜயகாந்த் படத்தின் பெயரை மாற்ற வேண்டாம். இதே பெயர்தான். நீங்கள் கிளாப்போர்டு அடியுங்கள். படத்தின் பெயரை மாற்றினாலோ, அல்லது நீங்கள் கிளாப்போர்டு அடிக்கவில்லை என்றாலோ நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் பேசி பிறகு படப்பிடிப்பு நடந்தது” என்று இயக்குனர் ரத்தினகுமார் கூறியுள்ளார்.
இந்த வட்டாள் நாகராஜின் பேச்சைத்தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு முறை நடிகர் ரஜினி கூறியதும், அது சர்ச்சையானதும் நடந்தது.