அண்மையில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்க்க வந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண் மற்றும் குழந்தைகளை திரையரங்கு உள்ளே சென்று படம் பார்க்க விடாமல் அங்கிருந்த ஊழியர் விரட்டிய செயல் தற்போது இணையத்தை கலங்கடித்துள்ளது. இது நடந்தது சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகினி திரையரங்கில்..
படத்தை பார்க்க டிக்கெட் வாங்கியும் அந்த பெண்ணையும், குழந்தைகளையும் திரையரங்கு வாசலிலேயே கெஞ்ச விட்டுள்ளார் அந்த ஊழியர். இதனை தட்டி கேட்கும் பொருட்டு அங்கிருந்த இளைஞர் ஒருவர், தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த பதிவு வந்த சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை கொந்தளித்து தீண்டாமை ஒழிப்பு குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேட்டியில் பேசியுள்ளார். அதில் யாரும் யாரையும் ஒதுக்கப்படுவதை தன்னால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த அவர், இதுபோன்ற சம்பவம் எங்கு நடந்தாலும் ஏற்கக்கூடியது அல்ல என கூறினார். மேலும் பேசிய விஜய் சேதுபதி மனிதர்கள் ஒன்றாக வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கிறது என அவரது பாணியில் பதிலளித்தார்.