சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ‘குஷி’ படத்தின் வெற்றி விழா நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, ‘குஷி’ படத்தில் தன்னுடைய ஊதியத்திலிருந்து, ரூ.1 கோடி ரூபாயை கஷ்டப்படும் 100 ரசிகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் என பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். விஜய் தேவரகொண்டாவில் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தின் விநியோஸ்தரான அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: “அன்புள்ள விஜய் தேவரகொண்டா, ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தை விநியோகம் செய்ததால் நாங்கள் ரூ.8 கோடி பணத்தை இழந்தோம். ஆனால் அதுபற்றி யாரும் பேசவில்லை. இப்போது நீங்கள் உங்களது பெரிய மனதால் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்குகிறீர்கள். எங்களது வெளியீட்டாளர்கள் மற்றும் விநியோகதஸ்கர்களின் குடும்பங்களையும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
கிராந்தி மாதவ் இயக்கிய ‘வேர்ல்டு ஃபேமஸ் லவர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேதரின் தெரசா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்தது.