வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜன. 11 அன்று, விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜித் நடித்துள்ள துணிவு படங்கள் வெளியாக இருக்கின்றன.
இப்படங்களிலன் பாடல், டீசர், போஸ்டர் வெளீயீடுகளை அவர்களது ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில்ராஜூ, ‘தமிழில் நெம்பர் ஒன் நடிகர் விஜய்தான்’ என்று சொன்னதும், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில், நடிகர் சரத்குமார், ‘விஜய்தான் இப்போது சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னதும் சர்ச்சையை ஏற்படுத்தின.
விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். மேலும், விஜய்தான் சூப்பர் ஸ்டார் என பேசிய யு டியுபர் ஒருவரது அலுவலகத்துக்குச் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விஜய் – அஜித் இணைந்து நடித்து 1995ல் வெளியான ஒரே படமான ராஜாவின் பார்வையிலே திரைப்படம் தற்போது சென்னையில் சில திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இதற்காக மாநகர் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
இதில், ‘ இப்பட துவக்கவிழாவுக்கு வருகை தந்த சூப்பர் ஸ்டாருக்கு நன்றி நன்றி’ என்ற வாசகமும், அதன் அருகிலேயே ரஜினியுடன் விஜய் இருக்கும் படமும் உள்ளது.
இதையடுத்து, “தனது படங்கள் குறித்த எந்த விசயமாக இருந்தாலும் கவனத்துடன் பார்த்து, சிந்தித்து அனுமதி கொடுப்பார் நடிகர் விஜய். அதே போல இப்படத்தின் போஸ்டருக்கும் அப்படித்தான் அனுமதி அளித்திருப்பார். ஆகவே, அவரது ஒப்புதலுடனேயே, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்ற வாசகம் மற்றும் படம் இடம்பெற்றுள்ளதாக கருத முடியும். ஆகவே இந்த போஸ்டர் மூலம் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது” என்கிறார்கள் திரைத்துறை வட்டாரத்தில்.