Thursday, April 11, 2024

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் இணைந்து உருவாகும் படம் என பல தயாரிப்பாளர்கள், கதைகள், தலைப்புகள் விவாதிக்கப்பட்ட பிறகு, முடிவு செய்யப்பட்ட படம்தான் இந்த ‘வெந்து தணிந்தது காடு’.  

பெரும் வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘மஹா’ சரியான கவனத்தைப் பெறாத நிலையில், சிம்புவின் ரசிகர்களும் இந்தப் படத்தையே எதிர்நோக்கியிருந்தனர்.

கௌதம் தன்னிடம் இருக்கும் காதல் கதை, போலீஸ் கதை இரண்டையும் விட்டுவிட்டு எழுத்தாளர் ஜெயமோகனின் கதையுடன் புதிய களம் நோக்கி நகர்ந்திருக்கிறார்.

இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது, அவனது வாழ்க்கை மும்பைக்கு சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. அந்தத் திருப்பத்தினால் விளையும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

திருச்செந்தூர் அருகில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் தன் தாய், சகோதரியுடன் ஏழ்மையில் வாழ்ந்து வரும் பி.எஸ்.சி. பட்டதாரியான ‘முத்து வீரன்’ என்ற சிம்பு தற்போதைக்கு ஊரிலேயே கருவேல மரங்களை பாதுகாக்கும் செக்யூரிட்டி வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் கருவேல மரங்கள் தீப்பிடித்து எரிந்துவிட அந்த வேலையும் பறிபோகிறது.

இதனால் வேலை கொடுத்தவருக்கும், சிம்புவுக்கும் மோதல் ஏற்பட இதில் தன் மகனின் வாழ்க்கை வீணாகிவிடுமே என்று நினைக்கும் தாய் ராதிகா, தனது உறவினர் மூலமாக சிம்புவை மும்பைக்கு அனுப்பி வைக்கிறார்.

மும்பையில் ‘செம்பூர்’ பகுதியில் இருக்கும் ‘இசக்கி பரோட்டா கடை’யில் வேலைக்குச்  சேர்கிறார் சிம்பு. காலையில் பரோட்டா கடையில் வேலை செய்யும் சில ஊழியர்கள் இரவானதும், கொலை செய்யும் அடியாட்களாகவும் இருக்கிறார்கள்.

இது தெரியாமல் வேறொரு உலகத்தில் இருக்கும் சிம்புவைக் கவர்கிறார் நாயகி சித்தி இத்னானி, தன்னைவிட நான்கு வயது கூடியிருந்தாலும் சித்தியை விடாது பின் தொடர்ந்து காதலிக்கிறார் சிம்பு. இந்தக் காதல் கை கூடும் நேரத்தில், வீரனின் வீரத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கையில் எடுத்து தங்களை கொலை செய்ய வந்தவர்களைச் சுட்டுத் தீர்த்ததும் உடனடியாக ஆன் தி ஸ்பாட்டிலேயே தளபதியாகிறார் சிம்பு. இப்போது மும்பையை ஆண்டு கொண்டிருக்கும் கர்ஜி டீம், குட்டி பாய் டீம் என்ற இரண்டு போட்டி குழுக்களில் ஒன்றில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது சிம்புவுக்கு.

கர்ஜி டீமின் தலைவரான கர்ஜிக்கு மெய்க்காப்பாளனாகிறார் சிம்பு. குட்டி பாய் டீம் கர்ஜியை தீர்த்துக் கட்ட போடும் ஒவ்வொரு திட்டத்தையும் முறியடித்துக் கொண்டே வரும் சிம்புவுக்கு முடிவில் என்ன கிடைக்கிறது..? அவரது காதல் என்னவானது..? என்பதைத்தான் இந்த அடர்ந்து விரிந்த கதைப் பரப்பில் சொல்லியிருக்கிறார்கள் கதாசிரியர் ஜெயமோகனும், இயக்குநர் கெளதம் மேனனும்..!

படத்தில் வழக்கமான இயக்குநரான கௌதம் மேனனைப் போலவே, சிம்பு என்ற நடிகரும் நம் கண்ணுக்குத் தென்படவில்லை. ‘முத்து’ என்கிற முத்து வீரனாக மாறுபட்ட தோற்றத்தில் இப்படியெல்லாம், இதுவரையிலும் நடித்ததில்லையே என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் சிம்பு. நம்ம சிம்புவா இது என வியந்து போகும் அளவுக்கும் உருமாறியிருக்கிறார்.

ஒரு ஏழை அப்பாவி இளைஞனாக அதற்கேற்ற நடை, உடை, பாவனை, உடல் மொழி இவற்றில் முழுவதுமாக தன்னை மாற்றிக் காண்பித்துள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட சிம்புவின் முந்தைய படங்களின் நடிப்பும், அவரது கதாபாத்திரம் நம் மனதிற்குள் வரவில்லை.

தொடக்கக் காட்சிகளில் மெலிந்த நிலையில் பார்ப்பதற்கே பரிதாபத்தை உருவாக்கும் தோற்றத்தில் காணப்படும் சிம்புவுக்கும், கிளைமாக்ஸில் நவீன வேலு நாயக்கராக தோன்றும் காட்சிக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத வித்தியாசங்கள்..!

தாங்கித் தாங்கி நடப்பது, உதடுகளை எப்போதும் பிரித்தே வைத்திருப்பது.. அடிக்கடி இடது கையால் முகத்தைத் துடைப்பது, சட்டை காலரில் முகத்தைத் துடைப்பது, தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் அறிந்திராத நெல்லை தமிழ்ப் பேச்சினை சரளமாகப் பேசியது என்று இந்தக் கிராமத்துக் கதாபாத்திரத்துக்காக நிறையவே உழைத்திருக்கிறார் சிம்பு.  

கொஞ்சம் கொஞ்சமாகக் கதை விரிய, விரிய சிம்பு தற்போதைய சிம்புவாக மாறும் காட்சிகள் வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காதல் காட்சிகளில் புரியாத புதிராக நிற்பதும், காதலைச் சொல்வதற்குக்கூட தெரியாமல் சங்கடப்பட்டு நிற்பதும் சிம்புவிடம் புதுமையான நடிப்பைக் காண்பித்திருக்கிறது.

துப்பாக்கியைத் தூக்கிய தளபதியானவுடன் அவரது பேச்சு வேறு லெவலுக்குப் போவதும், காதலிக்கே ஐடியா கொடுத்து தைரியம் சொல்லி தானே சென்று பெண் கேட்கும் அளவுக்குச் செல்வதுமாய் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை ரசித்து, ரசித்து செய்திருக்கிறார் இயக்குநர்.

காதலி, மனைவியான அன்றைய இரவில் நடக்கும் காட்சிகளில் சிம்பு படும் அவஸ்தையும், பதட்டமும், அப்புக்குட்டியை ‘துரோகி’ என்று இனம் கண்ட பின்பும் அமைதியாய் “நீதானண்ணே..?” என்று விரக்தியாய் கேட்கும் காட்சியிலும் நம் மனதைத் தொடுகிறார் சிம்பு.

இடைவேளைக்குப் பின் அப்படியே முழுமையான மாற்றம். ஒரு தாதாவுக்கு அடியாள், பாடிகார்ட் என பல படங்களில் பார்த்த கதாபாத்திரம்தான் என்றாலும் அதிலும் தனித்துத் தெரிகிறார் சிம்பு.

சண்டை காட்சிகளில் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியுமோ அத்தனையையும் காண்பித்திருக்கிறார் சிம்பு. பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இடைவேளை சண்டைக் காட்சியிலும், என்ன நடந்ததோ, என்ன நடக்கவிருக்கிறதோ என்ற பதைபதைப்புடன் கொண்டு சென்றிருக்கும் இறுதிக் காட்சிகளிலும் சிம்புவுக்கு ஐ லவ் யூ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. நிச்சயமாக சிம்புவுக்கு இந்தப் படம் ஒரு செகண்ட் இன்னிங்ஸ்தான்.

ஹீரோயின் சித்தி இட்னானி கேமிராவுக்கேற்ற முகம். சின்ன வயது சிம்புவைவிடவும் வயதானவராக கதைக்குப் பொருத்தமாகவே இருக்கிறார். சின்ன சின்ன ஆக்சன்களில் இளசுகளைக் கவர்ந்திழுக்கிறார். காதலன்-காதலி பேச்சு ஆண், பெண் உரிமை மீறல் பேச்சாக மாறும் தருணங்களில் தனது பெண்ணுரிமையை ஆணித்தரமாக பதிவு செய்வதுபோல நடித்திருக்கிறார் சித்தி. வெல்கம் டூ கோடம்பாக்கம்..!

முத்துவின் தாயாராக ராதிகா. இந்தக் கதாப்பாத்திரத்திற்கு வேறு யாருமே கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் இல்லை என்பதைப் போலவே தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ராதிகா. மகனின் கோபத்தினால் விரும்பத்தகாதது நடக்கும் என்று நினைத்து மகனை வெளியூருக்கு அனுப்ப நினைக்கும் அந்த இடத்திலிருந்து, சிம்பு மும்பைக்குக் கிளம்பும்வரையிலும் மனதில் நிற்கிறார் சித்தி ராதிகா..!

கட்ஜியாக நடித்திருக்கும் நடிகருக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்டை போட வேண்டும். “என்னை கொலை செஞ்சுருவியா..? அந்த நினைப்பு இருக்கா..? இப்பவும் இருக்கா..?” என்று விதம்விதமாக சிம்புவிடம் கேள்வி கேட்கும் ஸ்டைலில் மனிதர் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

குட்டி பாயாக சித்திக். தனது அனுபவ நடிப்பினால் அந்தக் கேரக்டருக்கு உரிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஒரு சிறு இடறல்கூட இல்லை. இவரின் உதவியாளராக நடித்திருக்கும் நீரஜ் மாதவ்.. ஒரு அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவரது பரிதாப வாழ்க்கை வேறொரு உலகத்தையும் காட்டுகிறது.

அப்புக்குட்டி நல்லவன்போல் நடிக்கும் நண்பன் என்ற கதாப்பாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார். சிம்புவிடம் அனைத்து ஊழியர்களையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே நமக்கு மிகவும் பிடித்துப் போனவராகிவிடுகிறார் அப்புக்குட்டி. இறுதியில் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

‘விக்ரம்’ படத்தில் குறடு வைத்துக் கொண்டு கால் நரம்பை கட் செய்யும் நபராக நடித்து நம் மனதில் நின்றவர்.. இந்தப் படத்தில் சிறப்புக் கொலையாளி ராவுத்தராக நடித்திருக்கிறார். இவரை நடிக்க வைத்தமைக்காகவே கெளதம் மேனனுக்கு ஒரு ஷொட்டு..! அவ்வளவு அதகளம் செய்திருக்கிறார்.

எப்போதும்போல  தொழில் நுட்பத்தில் சிறப்புக்களையே செய்திருக்கிறார் கெளதம் மேனன். படத்தின் துவக்கத்தில் நடுவக்குறிச்சியில் பொட்டல் காட்டையும், கருவேல மரங்களின் சூழலையும் அழகுற பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி.

ஹோட்டல் மாடியில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும், ஹோட்டலுக்குள் நடக்கும் காட்சிகளிலும் சித்தார்தா நுனியின் ஒளிப்பதிவு மிக அருமை. பாடல்களின் மாண்டேஜ் காட்சிகளில்கூட மும்பையின் அழகையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘மல்லிப் பூ’ பாடல் உற்சாகத்தைக் கொடுக்கிறது. ‘காலத்துக்கும் நீ வேணும்’, ‘உன்னை நெனைச்சதும்’, ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாடல் காட்சிகளில் நாயகனையும், நாயகியையும் பாடல் வரிகளை உச்சரிக்க வைத்தே படமாக்கியிருப்பது வித்தியாசமான அனுபவமாகத் தோன்றுகிறது.

பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் அடித்து ஆடியிருக்கிறார். இடைவேளை காட்சியில் துப்பாக்கியை சிம்பு கையில் எடுக்கும்போது ஒலிக்கும் பின்னணி இசை மாஸாக ஒலிக்கிறது. வழக்கமான டானுக்கான செட்டப் தீம் இசையை போடாமல் டான் முத்து வீரனை இறுதியில் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..!

இந்தப் படத்தின் கதாசிரியரான ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளர். அவர் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி வட்டார வழக்கு மொழியை லாவகமாக இந்தப் படத்தில் கொணர்ந்திருக்கிறார்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் நீடிக்கும் அந்தக் கிராமத்துக் கதையில் பேசப்படும் வசனங்களும், சொல்லப்படும் கதையும் அந்த ஸ்டைலான புத்தம் புதிய தமிழால் ரசிகர்களை அதிகம் கவர்ந்திழுத்துள்ளது.

வசனங்களும்கூட கெளதம் மேனனின் படங்களில் எப்போதும் இருக்கும் அதே ஸ்டைலிலேயே அமைந்திருக்கின்றன. அப்புக்குட்டி சக ஊழியர்களை அறிமுகப்படுத்தும் காட்சியிலும், அடியாட்களின் தவறைச் சுட்டிக் காட்டும் கட்ஜியின் உதவியாளர் திட்டும் காட்சியிலும் வசனங்கள் சரளமாக வந்து விழுந்திருக்கின்றன.

காதல் காட்சிகளில்கூட மெச்சூர்டான வசனங்களே வந்திருக்கின்றன. ஹோட்டலில் நாயகியைப் பார்த்துவிட்டு சிம்பு சூடாகி தொடர் கேள்விகளைக் கேட்க.. “நீ ஆம்பளை கேட்டுட்ட.. அதே ஹோட்டல்ல நீ என்ன பண்ணிக்கிட்டிருந்தன்னு நானும் கேக்கலாம்ல..” என்று ஆண், பெண் சமத்துவத்தை சுட்டிக்காட்டும் விதமாக நாயகி பேசும் பேச்சும் ரசனைக்குரியது.

கட்ஜி சிம்புவிடம் “நீ என்னை கொல்லப் போறியா.. நான் உனக்கு எவ்ளோ செஞ்சிருக்கேன்.. அதனால நீ என்னைய கொல்ல மாட்டேன்னு நானே என் மனசைத் தேத்திக்கறேன்..” என்று சொல்லுமிடத்திலும், “உன் மன்னிப்பெல்லாம் எனக்கு வேணாம்.. நீ செத்துடு போதும்..” என்று சொல்லுமிடத்திலும் அப்புக்குட்டியை துரோகியென சிம்பு அழைக்கும் காட்சியிலும் வசனங்களில் தனது தனித்தன்மையைக் காட்டி படத்திற்குப் பெரிதும் உதவியிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

பொதுவாக இலக்கிய எழுத்தாளர்கள் வெகுஜன மக்கள் விரும்பி, ரசித்துப் பார்க்கும் திரைப்படங்களின் வெற்றிக்கு எப்போதும் உதவ மாட்டார்கள். அவர்களின் கதை சினிமா கதைக்கு உதவாது.. என்ற பல வருட பேச்சினை இன்றைக்கு இந்தப் படத்தின் மூலமாக உடைத்தெறிந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

இந்த ‘வெந்து தணிந்தது காடு’ கதை, திரைக்கதையின் வழியே சொல்லிக் கொண்டே போய்தான் படமாக விரிந்திருக்கிறது. ஒரு சாதாரண முத்து வீரன் எப்படி அசாதரணமான வீரனாக உருவெடுக்கிறான் என்பதை இந்த வகையில்தான் சொல்ல முடியும். இந்த விரிவான திரைக்கதையாக்கத்தினால்தான் ரசிகர்களாலும் இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது.  

இது வழக்கமான கேங்ஸ்டர் படமில்லை. ஆனால் ஒரு கேங்க்ஸ்டரின் வாழ்க்கைப் பயணம். அந்தப் பயணத்தைதான் திரைக்கதையில் விஸ்தாரமாக விவரித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

ஆரம்பக் கட்ட காட்சிகள் கொஞ்சம் மெதுவாய் நகர்ந்தாலும், இடைவேளை வரைக்குமான சாதாரண முத்து வீரன், டான் வீரனாக உருவெடுக்கும் காட்சிவரையிலும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லை.

முதல் பாதியில் மும்பைக்கு வேலை தேடிச் சென்ற தமிழகத்து இளைஞர்கள் அங்கே எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.. என்ன துன்பப்படுகிறார்கள் என்பதையும் டீடெயிலிங்காக காட்டியிருக்கிறார். ஊரில் இருக்கும் மனைவியுடன் வீடியோ காலில் பேசி அவரை பாடச் சொல்லி ரசிக்கும் கணவனின் வலியை உணர்த்தும் அந்தக் காட்சி ஏ கிளாஸ் ரகம்.

இரண்டு போட்டிக் குழுக்களுக்கு இடையே தொடரும் பல வருட மோதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் சூழலை திரைக்கதையில் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.  

படம் முடிவடைந்துவிட்டது என்று நினைத்தபோது திடீரென ‘ஐந்து வருடங்களுக்குப் பிறகு’ என்று சொல்லி இரண்டாம் பாகத்திற்கான முன்னறிவிப்புடன் சிம்பு  வேறு கெட்டப்பில் தோன்றும் காட்சி அவரது ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சிதான். இரண்டாம் பாகத்துக்கான லீட் என்பதிலும் கவனமாக இந்த டான் எப்படி தனது டான் வாழ்க்கையைத் தொடர்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டி முன்னுரையை முடித்திருக்கிறார் இயக்குநர்.

சிம்புவின் நடிப்புக்காகவும், சுவையான கதைக்காகவும், சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும், கெளதம் மேனனின் அழுத்தமான நடிப்புக்காகவும் இந்த வெந்து தணியும் காட்டில் நாம் அவசியம் பயணம் செய்யலாம்தான்..!

ஆனால், இது அத்தனையும் ஒரேயொரு கேள்வியில் அடிபட்டுவிடும் அளவுக்கு லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்பதுபோல, மும்பையில் போலீஸ் டிபார்ட்மெண்ட்டே இல்லையா..? என்ற கேள்வியை இயக்குநர், எழுத்தாளர் இருவரிடமும் நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

இத்தனை கொலைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு நடந்திருக்கின்றன. இசக்கி ஹோட்டல் மற்றும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் படுகொலைகளை பார்த்தும் போலீஸையே படத்தில் காட்டாமல் அது பற்றிய நினைப்பே படம் பார்க்கும் நேரத்தில் நம் நினைவுக்கு வராத அளவுக்கு படத்தில் ஒன்ற வைத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனனின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!!!

RATING : 4 / 5

- Advertisement -

Read more

Local News