சீயான் விக்ரம் மற்றும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இணைந்து உருவாக்கியுள்ள ‘வீர தீர சூரன் – பாகம் 2’ திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். இந்நிலையில், ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அருண்குமார், நடிகர் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சீயான் விக்ரம், “நான் ஒரு நாள் ‘சித்தா’ படத்தை பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் அருண்குமாரை அவர் பெயரால் அழைக்கவில்லை. ‘சித்தா’னு தான் கூப்பிட்டேன். அவர் படங்களெல்லாம் எனக்கேற்றவையாகவும், எனக்குப் பிடித்தவையாகவும் இருக்கின்றன. இந்த படம் ‘சேதுபதி’ மாதிரி ரசிக்கக்கூடிய ரகளையோடும், அதேசமயம் ‘சித்தா’ போல உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய சூழல்களோடும் கூடியது” என தெரிவித்தார்.