சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து விலகினார் நடிகை வனிதா விஜயகுமார். அதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தியதாகவும் பெயர் குறிப்பிடாமல் நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
வனிதா விஜயகுமாரின் விலகலுக்குக் காரணம் அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணன் கடுமையாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, வனிதா விஜயகுமார் வெளியேறுவது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது. இதனை வைத்து ரம்யா கிருஷ்ணனால்தான் வனிதா விஜயகுமார் வெளியேறியிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தனது யூ டியூப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தார் நடிகை வனிதா விஜயகுமார்.
அதில், “குறை சொல்வதற்கும், புகார் சொல்வதற்கும் இதில் ஒன்றுமே இல்லை. எனக்குச் சொல்லப்பட்ட நிகழ்ச்சியின் வரைமுறைகள் வேறு. அங்கு நடக்கும் நிகழ்ச்சி வேறாக இருந்தது. நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஒரு நிகழ்ச்சிக்குப் போவது வேறு.. மற்றவர்கள் போவது வேறு.
ஆனால், இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஜோடிகள் சம்பந்தமான போட்டிக் களம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் மட்டுமே, இதில் பங்கு பெற முடியும். அதனால்தான் என்னைத் தொடர்பு கொண்டார்கள்.
அப்போது நான் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சிக்கு நடுவராக வேறு இருந்துள்ளேன். ஆகையால், மீண்டும் போட்டியாளராக செல்ல நான் விரும்பவில்லை. “இது நடன நிகழ்ச்சி அல்ல. அனைவருக்குமே மார்க் தனித்தனியாக இருக்கும். இது பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமே. போட்டியாளர் வெளியேற்றம்.. விமர்சனம் எல்லாம் இருக்காது. நீங்கள் இருப்பதை மக்கள் விரும்புவார்கள், ஆகையால் பங்கெடுக்க வேண்டும்…” என்று விஜய் டிவியினர் என்னை வற்புறுத்தினார்கள். அதனால்தான் அதில் கலந்து கொள்ள நான் சம்மதித்தேன்.
நாம்தான் இப்போது சீரியல்களில் நடிக்கவில்லையே என்பதால், ஏதேனும் ஒரு நிகழ்ச்சியின் மூலம் மக்களைச் சந்திக்கலாமே என்று நினைத்துதான் இதற்கு ஒப்புக் கொண்டேன்.
உண்மையில், அந்த நிகழ்ச்சியை நடுவர்கள் பார்த்தவிதம் கொஞ்சம் சீரியஸாக இருந்தது. பெரிய நடன நிகழ்ச்சி மாதிரியும், அதில் நாங்கள் போட்டியிட்டு ஜெயித்து கப்பைத் தூக்குவதற்குப் போன மாதிரியும் இருந்தது. ஆனால், அது உண்மையில்லை.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வரவேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் நடந்துகொண்ட விதத்தில் எனக்கு உடன்பாடில்லை.
மற்றொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நான் ஏன் சொன்னேன் என்றால், அனைவருமே சிறந்த போட்டியாளர்கள் என்னும்போது ஒப்பிடலாம். ஒரு நடிகர் படத்தில் நடிக்கும்போது, அந்தப் படத்தைப் பற்றி மட்டுமே பேச முடியும். விஜய்யிடம் போய் அஜித் நடித்திருப்பதால் பிரமாதமாக நடித்திருப்பார் என்று சொல்வது சரியா?. அது சரியான முறையல்ல என்று நினைக்கிறேன்.
அனைவருமே அவர்களுடைய நிலையில் சிறந்த ஸ்டார்கள்தான். அனைவருக்குமே ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் நானாக இருப்பதுதான் என் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.
ஷாரிக் பல்டி அடித்தான் என்பதற்காக சுரேஷ் சக்கரவர்த்தியும் பல்டி அடிக்க முடியுமா என்பதுதான் எனது கேள்வி. சுரேஷ் சக்கரவர்த்தி சாருக்கு பயங்கர கை வலி. அதையும் மீறி அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைப் பற்றி யாருமே பேசவில்லை.
அவர் ஒரு ஸ்டெப் தவறாக ஆடியதால், எனக்குக் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. தவறு நடப்பது இயல்புதான். அதை எப்படிச் சொல்கிறோம் என்பது மிகவும் முக்கியம்.
எலிமினேஷனும் இல்லை என்பதால், கொஞ்சம் பாராட்டிவிட்டு பின்பு இப்படிச் செய்திருக்கலாம் என்று சொல்லலாம்.
ஆனால், ரொம்பவே ஊக்கம் இல்லாத வகையில் பேசியதால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். சக நடிகர்களுக்கு மத்தியில் ஒருவரை மட்டும் குறிப்பிட்டுப் பேசுவது முறையல்ல.
நான், அவர், சுரேஷ் சக்கரவர்த்தி அனைவருமே நடிகர்கள்தான். அவர் வேண்டுமானால் 200 படங்கள் நடித்திருக்கலாம். அது எனக்குத் தேவையில்லாதது. ஆனால், சக நடிகர்களுக்கு மரியாதை முக்கியம் என்பதையே விரும்பினேன்.
அவர் பேசியதைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆகையால்தான் அவர் பெயரைக்கூட குறிப்பிடாமல் பேசுகிறேன். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை என்பதால் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்…” என்று சொல்லியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.