Friday, April 12, 2024

வனம் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தப் படத்தை கோல்டன் ஸ்டார் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜெ.பி.அலெக்ஸ், கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜெ.பி.அமலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிரிதி வெங்கட், வேல ராமமூர்த்தி, அழகம் பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஸ்ரீகந்தன் ஆனந்த், இசை – ரோன் எதன் யோகன், ஒளிப்பதிவு – விக்ரம் மோகன், படத் தொகுப்பு – பிரகாஷ் மாப்பு, கலை இயக்கம் – வீரமணி கணேசன், திரைக்கதை – சாப் ஜான் எடத்தட்டில், வசனம் – ஐசக் பாஸில் எமரால்டு. இணை இயக்கம் – ஜி.ராகவன், கே.ரபீக் ராஜா, துணை இயக்கம் – எஸ்.ராதாகிருஷ்ணன், உடைகள் வடிவமைப்பு – மீனாட்சி ஸ்ரீதரன், பாடல்கள் – ஞானக்கரவேல், நிர்வாகத் தயாரிப்பு – துளசிராமன் வெங்கடேசன், ஒலி வடிவமைப்பு – கடம் சிவா, விளம்பர வடிவமைப்பு – சோமசேகர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பாடல் பதிவு – பொன் அபிஷேக்.

வனங்கள் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கும் படம் இது. இந்தச் சமூகக் கருத்தோடு முன் ஜென்மக் கதை, பழி வாங்கல் என்று திகில், சஸ்பென்ஸ், திரில்லர், மர்டர் என்று பலவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

‘வண்ணாத்திப்பாறை’ மலைப் பகுதியில் இருக்கும் ஒரு நுண் கலைக் கல்லூரியில் சிற்பக் கலை பயிலும் மாணவர் வெற்றி. அந்தக் கல்லூரியைக் கட்டிக் கொண்டிருக்கும்போதே ‘1053’ என்ற ஹாஸ்டல் அறையில் பெயிண்டர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்.

தற்போது அதே அறையில் வெற்றி தனது நண்பர்களுடன் தங்குகிறார். அப்போது திடீரென்று அவருடைய நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.

அதே நேரம் அந்தக் கல்லூரியை முன் வைத்து ஒரு டாக்குமெண்ட்ரி தயாரிப்பதற்காக வருகிறார் நாயகி ஸ்மிருதி வெங்கட். அவருக்கும் இந்த மர்ம மரணங்கள் ஆச்சரியமாக இருக்க வெற்றியும், ஸ்மிருதியும் இணைந்து இந்தக் கல்லூரியின் பூர்வாசிரமம் பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்கள்.

1960-களில் அந்த ஊரில் வாழ்ந்த ஜமீன்தார் வேல ராமமூர்த்தி மனைவி, பிள்ளைகள் இல்லாதவர். தன் வீட்டில் வேலை செய்த பெண்களை மிகவும் கொடுமைப்படுத்துகிறார். ஆனால் தனக்குப் பின்பு தன்னைப் பற்றிப் பலரும் புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

தான் வாழும் காலத்திலேயே ஒரு கல்லூரியை நிறுவி அதில் தன் சிலையை வைக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதற்காக வண்ணாத்திப்பாறை அருகே கல்லூரி அமைக்க முயல்கிறார்.

அந்தப் பகுதியில் ஏற்கெனவே வசித்து வரும் ஆதிவாசிகளான பளியர்கள் இதை எதிர்க்கிறார்கள். அவர்களில் இருக்கும் மல்லி’ என்னும் அனு சித்தாரா அவர்களுக்கு வழி காட்டும் பெண்ணாகத் திகழ்கிறார்.

போலீஸை வைத்து அந்த மலைவாழ் மக்களை கொலை செய்தும், அடித்து விரட்டிய பின்பும்தான் அந்த இடத்தில் இந்த நுண் கலைக் கல்லூரியை வேல.ராமமூர்த்தி நிறுவியிருக்கிறார் என்பதை படித்துத் தெரிந்து கொள்கிறார்கள் வெற்றியும், ஸ்முருதியும்.

அதனால்தான் பழிக்குப் பழியாக இங்கே மரணங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்து கொண்டவர்கள் அடுத்து மேலும் மரணம் நிகழாமல் தடுக்கப் போராடுகிறார்கள். அது அவர்களால் முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார். உடம்புக்கேற்ற சட்டை என்பதை போல அதிகமாக நடிப்பைக் காட்ட தேவையில்லாத கதை என்பதால் இந்தப் படத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் வெற்றி. எந்த எமோஷனையும் காட்டாமல் அமைதியாக வந்தது தெரியாமல், போனது தெரியாமல் ஸ்கிரீனில் இருக்கிறார்.

மல்லி’யாக நடித்திருக்கும் அனு சித்தாராவுக்கு மலையாளத்தில் பெரும் ரசிகப் பட்டாளமே உண்டு. ஆனால் தமிழில் இவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் வலுவான கதாபாத்திரம்தான். பெயர் சொல்லும்விதமாக நடித்திருக்கிறார்.

ஸ்முருதி வெங்கட் ‘மூக்குத்தி அம்மனில்’ ஆர்.ஜே.பாலாஜிக்கு தங்கையாக நடித்தவர். இந்தப் படத்தில் கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

வேல ராமமூர்த்தியும், அழகம் பெருமாளும்தான் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜமீன்தாரான வேல ராமமூர்த்திக்கு அவருடைய முகமும், உடலமைப்பும் பொருத்தமாக இருந்திருக்கிறது. அழகம் பெருமாளின் கடைசி நேர டிவிஸ்ட் ரசிக்கும்படி இருக்கிறது. அவருடைய இயல்பான நடிப்பே அவரது கதாபாத்திரங்களை எல்லா படங்களிலும் காப்பாற்றி வருகிறது. இதிலும் அப்படியே..!

படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவுதான். வனப் பகுதிகள்தான் படத்தின் கதைக் களம் என்றான பின்பு அதை பிரம்மாண்டமாக காட்டாமல் விடக் கூடாதே..? வனத்திற்கே உரித்தான பசுமையையும், மர்மத்தையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன். ரான் ஈத்தன் யோஹானின் பின்னணி இசையும் குறிப்பிடும்படி இருக்கிறது. ஆனால், பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.

தப்புத் தண்டா’ என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகந்தன் ஆனந்த்தின் அடுத்த படம் இது. முதல் படத்தை திருட்டை மையமாக வைத்து உருவாக்கியவர், இந்தப் படத்தை சஸ்பென்ஸ்-திரில்லர் டைப்பில் இயக்கியிருக்கிறார்.

படத்தின் மிகப் பெரிய மைனஸே திரைக்கதைதான். எடுத்துக் கொண்ட கதைக் களம் திகில் ஃபேண்டஸி என்றாலும் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லாததால் பார்க்கும் நமக்கு எந்தவிதத் தாக்கமும் ஏற்படவில்லை.

தொடக்கம் முதல் இறுதிவரையிலும் ரசிகர்களால் எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகள்தான் இருக்கின்றன. அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மட்டுமே திருப்தியடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அழுத்தம் இல்லாததால் அதுவும் எடுபடாமல் போய்விட்டது.

ஸ்மிருதி வெங்கட்டை ஆவணப்பட இயக்குநர் என்பதோடு நிறுத்தியிருக்கலாம். தேவையில்லாமல், அவர் நாயகனின் சிறு வயது தோழி என்ற ஒரு புதிய திரைக்கதையை எழுதி, அதை சட்டென்று நாயகன் கண்டறிந்து “என்னைத் தெரியலையா..?” என்றெல்லாம் கேட்டுவிட்டு ஒரு டூயட் பாடுவது இந்தத் திரைக்கதைக்கு பொருத்தமே இல்லாமல் போய்விட்டது.

இதேபோல அனு சித்தாரா வேல ராமமூர்த்தியிடம் பழங்குடியின மக்களின் கஷ்டங்களைப் பற்றிப் பேசும் காட்சிகளெல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவையாக தோன்றுகின்றன.

திகில், ஃபேண்டஸி, பீரியட் என்று மூன்று தளங்களில் இந்தப் படம் மாறி மாறிப் பயணித்தாலும் ஒரு கட்டத்தில் திகில் படமாகவும் இல்லாமல், ஃபேண்டஸி படமாகவும் இல்லாமல் தடுமாறிவிட்டது.

படத்தின் டைட்டிலுக்குப் பின்பு பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து புறப்படும் காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று நம்மை கூர்ந்து கவனிக்க வைத்தன.  ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகளில் பார்வையாளர்களை திகிலூட்ட இயக்குநர் எடுத்திருக்கும் காட்சிகள் புஸ்வானமாகிவிட்டன.

மொத்தத்தில் மறு பிறவி, முன் ஜென்ம தோற்றத்தைக் காட்டும் மாயக் கண்ணாடி, வன தேவதை என்று சுவாரஸ்யமான கதைக் களங்களை கையில் வைத்துக் கொண்டு அழகாக எடுத்திருக்க வேண்டிய படத்தை முழுமையாக்க இயக்குநர் தவறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

RATINGS : 2.5 / 5

- Advertisement -

Read more

Local News