2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று தமிழ்ச் சினிமாவின் இரு பெரும் வசூல் மன்னர்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும், ‘தல’ அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒன்றாக வெளியானது.
இரண்டு திரைப்படங்களுமே வசூலுக்குக் குறைவில்லாமல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்தன.
அதேபோல் அடுத்தாண்டு 2021 ஏப்ரல் 14 அல்லது மே 1 ஆகிய தேதிகளில் ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும், அஜீத்தின் ‘வலிமை’ படமும் போட்டிக்கு வருமா என்ற கேள்வி தமிழ்ச் சினிமா ரசிகர்களின் மனதில் கேள்விக்குறியாக இருக்கிறது.
அப்படி அமைந்துவிட்டால் நிச்சயமாக தியேட்டர்களுக்குக் கொண்டாட்டமாகவும், தமிழ்த் திரையுலகத்திற்கு மீண்டும் ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாகவும் அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஆனால், இது நடைபெறுமா என்பது சந்தேகம்தான் என்கிறது கோடம்பாக்கம்.!
அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதம் முடிந்துவிட்டாலும் வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளை படமாக்கிய பின்பே ஒட்டு மொத்தப் படமும் போஸ்ட் புரொடெக்சன் பணிகளுக்குச் செல்லும். இதற்கே 2 மாதங்களாகிவிடும்.
ஜனவரி இறுதியில் ஷூட்டிங்கை நடத்தி பிப்ரவரி மத்தியவாக்கில் துவங்கி மார்ச் கடைசிவரையிலும் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளை நடத்தினாலும் ஏப்ரல் மத்தியிலோ அல்லது மே முதல் தேதியிலோ கொண்டு வருவதற்கு மீண்டும் மெனக்கெட வேண்டும்.
அதற்குள்ளாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் தேர்தல் களத்தில் ஆர்வமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் எந்தப் படங்களை வெளியிட்டாலும் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் அனைவருமே சொல்வார்கள். இதன் காரணமாகவே ‘வலிமை’ தேர்தல் சூட்டில் களம் இறங்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம்.
ஜனவரி மாதம் தான் துவக்கவுள்ள கட்சி வேலைகளைப் பார்ப்பதற்கு வசதியாக எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடும்படி ரஜினியே படக் குழுவினரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
இதனால் இந்தப் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு இந்த ஜனவரியின் கடைசியில் துவங்கவுள்ளது. பிப்ரவரி மத்தியில் நிச்சயமாக முடிந்துவிடும். இதன் பிறகு அதிகப்பட்சம் இந்தப் படத்தை ஏப்ரல் 14-க்குள் தயார்படுத்துவிடலாம். ஆனால், உடனேயே சுடச்சுட ‘அண்ணாத்த’ வெளியாகுமா என்பதும் கேள்விக்குறிதான். காரணம் அரசியல்..
இந்தப் படத்தைத் தயாரிப்பது ‘சன்’ தொலைக்காட்சி. அந்தத் தொலைக்காட்சி அரசியல் பின்புலத்தைக் கொண்டது. ஆட்சிக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் குடும்பத் தொலைக்காட்சி.
தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் பின்புலத்தில்தான் ரஜினி கட்சி தொடங்கவிருப்பதாக நாலாபக்கமும் பேச்சுக்கள் எழுந்திருக்கிறது. இந்த நேரத்தில் அதற்கு எதிர்க் கோஷ்டியான ‘சன்’ தொலைக்காட்சி ரஜினியின் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டு நிச்சயமாக ரஜினிக்கு ஒரு கவன ஈர்ப்பை ரசிகர்களிடத்திலும், மக்களிடத்திலும் பெற்றுத் தர மாட்டார்கள் என்பது நிச்சயம்.
ஏனெனில், ‘அண்ணாத்த’ படத்தில் நிச்சயமாக ரஜினியின் அரசியல் பார்வை, நிலவரம், கட்சியின் செல்பாடு ஆகியவை பற்றிய சர்ச்சையான வசனங்களோ, பன்ச் வசனங்களோ இடம் பெறத்தான் செய்யும்.
இப்படி ரஜினி ‘அண்ணாத்த’ படத்தின் மூலமாக தன் கட்சிக்கு பூஸ்ட் கொடுக்கும்படியான சிச்சுவேஷனை, வாழ்வா.. சாவா.. என்ற போராட்டக் களமாக இருக்கப் போகும் 2021 தேர்தல் நேரத்தில் ‘சன்’ தொலைக்காட்சி நிச்சயம் செய்யாது என்று நம்புகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆக, ரஜினி தேர்தல் களத்தில் எந்தப் பக்கம் நிற்கப் போகிறார் என்பதைப் பொறுத்துதான் ‘அண்ணாத்த’ படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகுமா.. வெளியாகாதா என்பதைச் சொல்லவே முடியும் என்பதுதான் இப்போதைய நிலவரம்..!