நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் காமெடி காட்சிகள் ரொம்பவே பிரபலம். ரஜினி, விஜய் அஜித் என்று பல நாயகர்ளுடன் நடித்துள்ளார். அதே நேரம் வடிவேலுவுடன்’சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’ என நிறைய படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில தோன்றி இருக்கிறார்.
அப்பாவித்தனமான பேச்சு மொழி, இயல்பான உடல் மொழி என ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் சிறுநீரகம் இரண்டும் செயல் இழந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
‘கண்ணும் கண்ணும்’ படத்தில் வடிவேலுவுடன் இவர் நடித்த காட்சியில் “அடிச்சுக் கூட கேப்பாங்க.. அப்பக்கூட சொல்லிடாதீய” என்று இவர் பேசிய வசனம் இப்போதும் சமூக ஊடகங்களில் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஒரு படத்தின் போது வெடி வைத்து தனது மூக்கை வடிவேலு உடைத்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்.
“அப்போ ‘சுந்தரா டிராவல்ஸ்’ படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. நானும் வடிவேலுவும் நடிக்க வேண்டும். ஒரு காட்சியில் நான் மாப்பிள்ளையாவர, வடிவேலு பேருந்து க்ளீனராக வருவார்.
பஸ் நகர்ந்து என் முகம் தெரியும்போது, கரும்புகையை அடிக்க வேண்டும் என்பதுதான் ஷாட்.
‘பஸ் புகை அடிக்கும் அவ்வளவுதான்டா’னு சொன்னார் வடிவேலு. ஆனா, காட்சி இயல்பாக இருக்கவேண்டும் என்று எனக்குப் பக்கத்துல வெடியை வத்து இருந்திருக்கிறார். இது எனக்குத் தெரியாது.
ஷாட் ரெடியானதும் வெடி ‘பட்’என்று வெடிக்க, என் சில்லி மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. நான் பரிதாபமாக பார்க்க.. ஏதோ நான் சிறப்பாக நடிப்பதாக நினைத்து மொத்த யூனிட்டும் கைதட்டிப் பாராட்டினார்கள். புகை போய், என்னைப் பார்த்த பிறகுதான், எனக்கு அடிபட்டது அவர்களுக்குத் தெரிந்தது. இப்போதும் அந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனது மூக்கை தொட்டுப் பார்த்துக்கொள்வேன்” என்கிறார் போண்டா மணி.
ரசிகர்களை சிரிக்க வைக்க, நடிகர்கள் என்னென்ன துன்பத்தை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது!