2D Entertainment நிறுவனம் தயாரித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்த ‘உடன்பிறப்பே’ படம் ஜோதிகாவிற்கு 50-வது படமாகும்.
தொடர்ந்து பல்வேறு வகையான படங்களாகத் தயாரித்து வந்த 2D நிறுவனம் அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு இந்த ‘உடன்பிறப்பே’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் கணவன், மகள் என வாழ்ந்து வரும் ஜோதிகாவிற்கு தன் அண்ணன் சசிகுமார் என்றால் உயிர். ஆனால், அவர் சசிகுமாருடன் பேசாமல் இருக்கிறார். காரணம், தன் கணவர் சமுத்திரக்கனி சசிகுமாரிடம் பேசாமல் இருப்பதுதான்.
சசிகுமாரிடம், சமுத்திரக்கனி பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன..? பிரிந்து நிற்கும் அண்ணன் தங்கை முடிவில் எப்படி இணைந்தார்கள்..? இதற்கிடையே ஊரில் தவறான சில விசயங்களைச் செய்து வரும் கலையரசனை சசிகுமார் எப்படி துவம்சம் செய்கிறார்…? இவைகளுக்கான பதில்தான் இந்த ‘உடன்பிறப்பே’ திரைப்படம்.
பத்திரிகை துறையில் பணியாற்றி இயக்குநர் ஆனவர் இரா.சரவணன். அதனால் அவருடைய படம் என்றால் சமூக அக்கறை நிறையவே இருக்கும். அவரது முதல் படமான ‘கத்துக்குட்டி’யில் அது மிகச் சிறப்பாகவே வொர்க்கவுட் ஆகியிருந்தது. இரண்டாவது படமான இந்த ‘உடன்பிறப்பே’விலும் அது ஓரளவு எடுபட்டிருக்கிறது.
படத்தில் இரா.சரவணன் எழுதியுள்ள வசனங்கள் பல இடங்களில் கை தட்ட வைக்கின்றன.
படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ஜோதிகாவிற்கு. கண்களாலே சோக மொழிகளை கடத்தும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவரது நடிப்பு தனித்துத் தெரிகிறது. அவரது அண்ணனாக வரும் சசிகுமார் தன் அளவு உணர்ந்து நடித்து ஸ்கோர் செய்கிறார். சமுத்திரக்கனியின் கதாப்பாத்திரம் நேர்மையின் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கேரக்டருக்கு அவரும் நியாயம் செய்துள்ளார்.
‘ஆடுகளம்’ நரேன், கலையரசன் இவர்கள் இருவரும் படத்தின் வீணடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான போர்ஷனில்தான் திரைக்கதை சற்று தொய்வாக இருக்கிறது. சூரியின் காமெடி போகிற போக்கில் சிரிக்க வைக்கிறது..
டி.இமானின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் நச் ரகம். பின்னணி இசையிலும் காட்சிகளோடு நம்மை ஒன்ற வைக்கிறார்.. படத்தின் ஒளிப்பதிவு நேர்மறை வெளிச்சம். மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. யுகபாரதி, சினேகனின் பாடல் வரிகளை ரசிக்க முடிகிறது. படத்தின் லொக்கேசன்களை தேர்ந்தெடுத்திருக்கும்விதம் சிறப்பு. நல்ல ரசனை. சூரக்கோட்டையில் உள்ள ‘நடிகர் திலகம்’ சிவாஜி வீட்டில் சில காட்சிகளை எடுத்துள்ளார்கள்.
அண்ணன், தங்கை பேசாமல் இருப்பதற்கான காரணம் என்ன..? என்ற ஒரு இழையை வைத்து மட்டுமே இப்படத்தை ஒரு பாசப் போராட்டமாக கொண்டு சென்றிருக்க முடியும். அதை விட்டுவிட்டு ஏனோ இயக்குநர் இரண்டாம் பாதியில் அநியாயத்திற்கு சறுக்கியிருக்கிறார்.
அண்ணன் தங்கை அன்பின் வெளிப்பாடுகளை இன்னும் கூர்மையாக காட்சிப்படுத்தியிருக்கலாம். படம் எதை நோக்கிப் போகிறது என்ற குழப்பம் சற்று மிகையாகிவிட்டது இரண்டாம் பாதியில்.
ஆயினும், அன்பை உறவைப் போற்றும் படங்களை நாம் கொண்டாட வேண்டும். அதனால் சிறு, சிறு குறைகள் இருந்தாலும் எக்காலத்திலும் பார்க்கத் தகுதியான படம் இது.