இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா’ உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் .
அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.
விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கவிஞர் பழ.புகழேந்தி, தனது முகநூல் பதிவில் இது குறித்து குறிப்பிட்டு உள்ளார்.
அதில், ‘இயக்குநர் வ.கௌதமன் – தமிழ்த்தேசியவாதி என்று தன்னை அறிவித்துக் கொள்கிறவர். ஆனால் அவர் சாதி வெறியர் எனபதற்கு அவரது முகநூல் பதிவுகளே போதுமானது.
அவர் தற்போது இயக்கி வரும் “மாவீரா” என்கிற திரைப்படத்தின் பெயரை ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றி இருக்கிறார்.
ஏன் மாற்ற வேண்டும்?. சேலத்தை கதைக் களனாகக் கொண்ட “மாமன்னன்” திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனின் பெயர் “அதிவீரா”. இதுதான் வ.கவுதமன், தனது படப் பெயருடன் படையாண்டவர் என சேர்த்துள்ளார்.
‘படை’ என்பதோடு ‘ஆண்டவன்’ என்பதைச் சேர்ப்பதன் வாயிலாக ‘ஆட்சி’ என்கிற சொல்லை குறிக்க வருகிறார். ‘படை’ என்பதோடு ‘ஆட்சி’ சேர்ந்தால் என்ன வரும் என்பதைப் புரிந்து கொள்க. மேலும் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் இரண்டு புறமும் நாய்களோடு அமர்ந்திருக்கிறார். மாமன்னன் படத்தில் நாய் என்பது ஆதிக்க சாதி குறியீடாக காண்பிக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைவில் கொள்க.
இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைய வலதுசாரித் தமிழ்த்தேசியம் போகும் பாதை இதுதான் என்பதைப் புரிய வைக்கவே’ என்று கவிஞர் பழ.புகழேந்தி பதிவிட்டு உள்ளார் .