சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘காதல்’ படம் மூலம் பிரபலமானவர் சுகுமார். அதனால் தமிழ்த் திரையுலகத்தில் இன்றும் அவர் ‘காதல் சுகுமார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் இதுவரையிலும் 2 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது 3-வது படத்தை இயக்கி வருகிறார்.
இன்றைக்கு ‘காதல்’ சுகுமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து மீது புகார் அளித்திருக்கிறார்.
புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுகுமார், “இந்தக் கொடிய நெருக்கடியான கொரோனா நேரத்தில் குழந்தைகள் செல்போன் மூலம்தான் பாடம் படித்து வருகிறார்கள்.
ஆனால் இலக்கியா, ஜி.பி.முத்து போன்ற டிக்டாக் பிரபலங்களெல்லாம் தங்களுடைய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இதனால் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுச் செயலாளர் ஏழுமலை, டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர்கள் மீது புகார் அளித்தார். அது பற்றி நானும் என் கருத்தை தெரிவித்தேன்.
இதையடுத்து டிக் டாக் பிரபலங்களான ஜி.பி.முத்து, நெல்லை சங்கர், சேலம் மணி ஆகியோர் இணையத்தளம் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஆபாச வீடியோக்களாக இருக்கும் அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்க வேண்டும். மேலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகத்தான் காவல் ஆணையரிடம் இன்று புகார் கொடுத்துள்ளேன்..” என்றார்.