தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘யானை.’
Drumsticks Productions சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக, நண்பர்கள் முன்னிலையில் சமீபத்தில் ஜி.ஆர்.டி. கிராண்டேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர் ஹரி பேசும்போது, “நானும், அருண் விஜய்யும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இப்போது இந்தக் கதைதான் நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது.
இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல்தான். இந்த படம் பெரிய பட்ஜெட் படம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான். அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தை கொஞ்சம் வேறு மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுக் கொண்ட பின்னர்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். நான் ‘தாமிரபரணி’, ‘ஐயா’ போன்ற படங்களை எடுத்தபோது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் உள்ளன. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது. அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குநர் போல் இந்தப் படத்தில் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால படங்கள் போல் இப்படம் இருக்கும்…” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசும்போது, “நானும், இயக்குநர் ஹரியும் ரொம்ப நாளாக பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட் செலவில், பலமான தொழில் நுட்ப கலைஞர்களுடன் படத்தை உருவாக்க பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகியது தயாரிப்பாளர் சக்தி ஸாரைத்தான். இந்தப் படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். அது இவருக்கு இருந்தது. இதற்காக தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய நன்றி.
இந்தப் படம் காமெடி நிறைந்த, பொழுது போக்கு திரைப்படம். ரொம்ப நாட்கள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்கு பெரிய உதவியாக இருந்தார். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர். அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இது ஹரி சார் தன்னுடைய வழக்கமான பேட்டர்னில் இருந்து மாறி எடுத்திருக்கும் படம்.
சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம்தான், எனது கதாபாத்திரம். படத்தில் பல காட்சிகளில் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்திருக்கிறேன். படத்தின் ஆக்சன் காட்சிகள்தான் பெரிய சவாலாக இருந்தன. படப்பிடிப்பின்போது எனக்கு அடிபட்டது. அதையும் தாங்கிக் கொண்டுதான் படத்தை எடுத்து முடித்தோம்.
இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். படத்தை அட்டகாசமாக எடுத்துக் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷூடன் இது எனக்கு முதல் படம்.
மேலும் படத்தில் நடித்த அனைவருமே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும் என நம்புகிறோம்…” என்றார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசும்போது, “இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குநர் ஹரி சார்தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பை கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார்.
ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரக்கனி, ‘தலைவாசல்’ விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பை பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. இது மிக நல்லதொரு உணர்வுபூர்வமான படம்…” என்றார்.