தனது படங்களில் மனிதரின் பல்வேறு உணர்வுகளை ஆழமாக வெளிக்கொணர்ந்து ரசிகர்களை ரசிக்க, வியக்க வைப்பவர் இயக்குநர் அமீர்.
அமீரும், பாலாவும் பால்ய நண்பர்கள். 1980களில் மதுரையில் இருந்து சென்னைக்கு இருவரும் வந்தனர். பாலா, பாலுமகேந்திராவிட உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டார். அமீர் மீண்டும் மதுரைக்கே திரும்பி விட்டார். 10 வருடங்கள் உதவி இயக்குநராக இருந்த பாலா, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, சேது படத்துக்கு இயக்குநர் ஆகிறார்.
இதனை அவர், அமீருக்கு தெரிவிக்க அவரும் உற்சாகத்துடன் சென்னை வருகிறார். சேது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.
பல பிரச்சினைகள் ஏற்பட.. அதையெல்லாம் கடந்து படம் வெளியாகி பெரும் வெற்றி பெறுகிறது.
தொடர்ந்து அடுத்த படங்கள்.
சூர்யாவை வைத்து பாலா இயக்கிய நந்தா படம் உருவாகிறது. அதன் படப்பிடிப்பின் இடையே ஏதோ காரணத்தால் அமீர் விலகுகிறார்.
இனி திரைத்துறையே வேண்டாம் என்கிற அளவுக்கு விரக்தியில் இருக்கிறார்.
நந்தா படத்தின் தயாரிப்பாளர், அமீரை அழைத்து”படப்பிடிப்பின்போதே உங்கள் பணியை கவனித்தேன். சிறப்பாக உழைத்தீர்கள். உங்கள் முதல் படத்தை நான் தயாரிக்கிறேன்” என்று சொல்லி ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அப்படி உருவானதுதான் அமீர் இயக்கிய முதல் படமான, மவுனம் பேசியதே.
நாம் விரும்பும்போது விலகுவதும், விலகும் போது நெருங்கி வருவதும்தான் காலத்தின் அதிசயம் போலும்!