கடந்த வாரம் வெளியான ஒரேயொரு துணுக்குச் செய்தி தமிழ்த் திரையுலகத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது.
‘மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று சிலரும், ‘அமேஸான் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது’ என்று மற்றொரு தரப்பும் செய்தியை பரப்புரை செய்தன.
இதனால் ‘மாஸ்டர்’ படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக செய்திகள் வைரலாகி பரவ.. விஜய்யின் ரசிகர்களிடையேயும், தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
மிக அதிக விலை கொடுத்து ‘மாஸ்டரை’ வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும், இந்தாண்டில் வரலாறு காணாத அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்திருக்கும் தியேட்டர்காரர்களும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நடுங்கித்தான் போனார்கள்.
செய்தி வதந்திதான் என்றாலும் இதில் பாதி உண்மை.. மீதி பொய்யுரைதான். ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் நெட்பிளிக்ஸிற்கு அல்ல. அமேஸான் பிரைம் வீடியோ தளத்திற்கு.
கிட்டத்தட்ட 200 கோடி ரூபாயைத் தொட்டுவிட்ட படத்தின் பட்ஜெட்டை வெறுமனே 100 கோடிக்குள் விற்பனை செய்து முடித்துவிட முடியாது. ஏனெனில் விஜய் டாப் ஸ்டார்களில் ஒருவர். தியேட்டர் வசூலில் மொக்கையான படமாக இருந்தாலும் 100 கோடியை அலட்சியமாகத் தாண்டக்கூடிய பந்தயக் குதிரை. ஆகவே அவர் மூலம் கிடைக்கவிருக்கும் தியேட்டர் வசூலை இழப்பதற்கு தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ, தியேட்டர்காரர்களோ தயாராக இல்லை.
எனவே ‘மாஸ்டர்’ படத்தை தியேட்டருக்குக் கொண்டு வருவதற்கு மூன்று தரப்பினரும் முனைப்புடன் இருக்கிறார்கள். விஜய் படம் என்றால் அவரது ரசிகர்கள், அடுத்தது குடும்பத்தினர் அனைவருக்கும் தியேட்டருக்கு வந்து குவிந்தால் வசூலும் கூடும். அப்படியே அடுத்தடுத்த படங்களுக்கும் மக்கள் கூட்டம் கூட வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
ஆனால், இன்னொரு பக்கம் அவர்களில் ஒரு சிலரே அந்த நம்பிக்கைக்கு விரோதமான நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் யார் படம் போட்டாலும் அவ்வளவு கூட்டம் வராது. கொரோனா பயத்தில் மக்கள் குடும்பமாக கண்டிப்பாக வர மாட்டார்கள். விஜய்யின் ரசிகர்கள் மட்டுமே வர முடியும்.
அப்படியே வந்தாலும் 50 சதவிகித இருக்கைகளுக்குதான் அனுமதி என்பதால் ஒவ்வொரு தியேட்டரும் அட்வான்ஸ் தொகையாக விநியோகஸ்தர்களிடத்தில் கொடுத்திருக்கும் தொகையை மீண்டு எடுப்பதற்கு கண்டிப்பாக 6 அல்லது 8 வாரங்களாகும்.
ஒருவேளை ‘மாஸ்டர்’ திரைப்படம் மேக்கிங்கில் நன்றாக இல்லை என்ற செய்தி வெளியானால் ‘புலி’ படத்தின் நிலைமைதான் இதற்கும் வரும்.
‘புலி’ படம் வெளியானபோது படத்தின் இடைவேளையோடு ரசிகர்கள் எழுந்து வெளியேறியதை வீடியோ எடுத்து சிலர் வெளியிட.. அது வைரலாகி.. கடைசியில் ‘படம் நல்லாயில்லை’ என்று நினைத்து குடும்பத்தினரும் ஒட்டு மொத்தமாய் புறக்கணிக்க படம் தோல்வியடைந்தது.
அப்படியொரு சூழல் வருமானால் ‘மாஸ்டர்’ படத்திற்குக் கிடைக்கும் வசூல் ‘புலி’ படத்தில் இருந்து கிடைத்த வசூலில் பாதியாகத்தான் இருக்கும். இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இதனாலேயே ‘திக் திக்’ மன நிலையில் தவிப்புடன் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும்.
‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் என்னதான் தியேட்டரில் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று சொன்னாலும், இந்த களேபரங்களை மனதில் வைத்து அனைத்துத் தரப்பினரும் இதனை சந்தேகக் கண்ணுடனேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வதந்திகளையெல்லாம் தடுப்பதற்கு ஒரே வழி. படத்தின் நாயகனான விஜய் மாஸ்டர் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு விசிட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுதான். அவர் இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒரு ரவுண்டு வந்தால் கொரோனா பயமில்லாமல் ரசிகர்களும், அவர்களது குடும்பத்தினருக்கும் தியேட்டர்களைத் தேடி, ஓடி வருவார்கள்.
விஜய் மட்டும் அல்ல. அனைத்து ஹீரோக்களும் இதை பாலோ செய்தால் அவரவர் ரசிகர்களும் கொரோனா பயமி்லலாமல் தியேட்டருக்கு வருகை தருவார்கள். மறந்து போன தியேட்டர் பழக்கத்தை மக்களிடையே மீண்டும் கொண்டு வருவதற்கு, இதைவிட்டால் வேறு வழியில்லை..
செய்வாரா விஜய் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி..!