திரையரங்குகளில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணத்தை அதிகரிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்துள்ளது.
திரையரங்குகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு, 2017-ம் ஆண்டு ஒரு அரசாணையை பிறப்பித்தது.
அதில், மாநகராட்சிகளில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல, நகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்து, கட்டணத்தை அதிகரிக்க கோரி வாகன நிறுத்துமிடத்துக்கு உரிமம் பெற்ற இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தங்கள் தரப்பு கருத்தை கேட்காமலும், நிலத்தின் மதிப்பை கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, கட்டணம் நிர்ணயித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. அது பொது நலனுக்கு எதிரானது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது…” என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், “கட்டணத்தை அதிகரிக்க கோரி மனுதாரர் தமிழக அரசை அணுகி கோரிக்கை வைக்கலாம். அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது…” எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.