‘ஆஹா’ ஓடிடி தளத்தின் புதிய படைப்பான ’பேட்டைக்காளி’யின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்த டிரெயிலர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது.
‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு இது சென்னையில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஆஹா’ தளம் முன்பே சொன்னது போல, 100% தமிழ் கண்டெண்ட் என்பதில் உறுதியாக இருக்கிறது என்பதற்கான உண்மையான ஒரு நிகழ்வுதான் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டோடு இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டியது.
ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத் தொடர் என்ற பெருமையை இந்தப் ’பேட்டைக்காளி’ பெற்றுள்ளது.
’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத் தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பை இதில் கொடுத்துள்ளார். ஷீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், கிஷோர், வேலா ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் La. ராஜ்குமார் இந்த நிகழ்ச்சியை நடத்துபவராகவும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழி நடத்துபவராகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் பலவற்றை இந்தப் ‘பேட்டைக்காளி’ காண்பிக்க இருக்கிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால் அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம்.
இதை இந்தப் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடர் விரிவாகவே காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வின் இயக்குநரான La. ராஜ்குமார் ‘பேட்டைக்காளி’ உருவாக்கம் குறித்து பகிர்ந்து கொண்டார், “முன்பெல்லாம் மனிதர்கள் காடுகளில் அலைந்து திரிந்தனர். அதன் பிறகு காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் அவர்கள் விவசாயத்தையும், காளைகள் வளர்ப்பது குறித்தும் கற்றுக் கொண்டனர்.
எனவே, காளைகள் வந்த பிறகுதான் மனிதர்களின் வாழ்வில் கலாச்சாரம் மெல்ல வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் மனிதர்கள் காளைகளை அடக்கியது இப்போதும் நம் கலாச்சார விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில்தான் நடக்கிறது.
நம்முடைய கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் இதுவரை சொல்லப்படாத கதைகளை ஆராயவும் இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளோம்” என்றார்.
இந்தப் ’பேட்டைக்காளி’ நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.