Thursday, April 11, 2024

மை.பா: யார் அந்த ‘துணிவு’ பட நிஜ கதாபாத்திரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கும் அஜீத்தின் துணிவு படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே, பெயர் என்ன  அஜித் கதாபாத்திரம் என்ன யார் யார் நடிக்கப்போகிறார்கள், யார் இசை, போஸ்டர் எப்போது வெளியாகும், பாடல்கள் எப்போது வெளியாகும் என ஒவ்வொரு விஷயத்தையும்  ரசிகர்கள்  எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தனர்.

அதன்படியே ஒவ்வொரு அறிவிப்பு வெளியானதும் இணையவெளியில் தங்கள்  கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். அதே போல படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை ஏற்படுத்தின.

நேற்று வெளியான டீசரும், ஒரே நாளில் கால் கோடி பார்வையாளர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த வரிசையில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடிக்கும்,  ‘பத்திரிகையாளர் மை.பா. நாராயணன்’ என்ற கதாபாத்திரமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிஜயமாகவே அப்படி ஓர் பத்திரிகையாளர் இருக்கிறார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகத்துறையில் இயங்கி வரும் மை.பா.நாராயணன், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

வைகோ, விஜயகாந்த் போன்ற சில தலைவர்கள் தங்களது அரசியல் செயல்பாடு குறித்து  இவரிடம் ஆலோசனை கேட்பதும் உண்டு.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்களுடனும் நெருங்கிப் பழகுபவர்.

ஆன்மிக ஈடுபாடுள்ள இவர், ஆழ்வார்க்கடியான் என்ற புனைப்பெயரில் பக்தி உரை ஆற்றுகிறார். ஆன்மிகம், அரசியல், வரலாறு என எந்தத் துறையாக இருந்தாலும் சிறப்பாக பேசுவார்.

தனது பத்திரிகை பேட்டிகளில் சிலவற்றை, ‘சந்திப்பு’ என்ற பெயரில் தொகுத்து நூலாக வெளியிட்டு உள்ளார். ஆன்மிக புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.,

துக்ளக் ஆசிரியர் மற்றும் உரிமையாளராக இருந்த சோ ராமசாமி உருவாக்கிய ‘எங்கே பிராமணன்?’ தொடரில் முதன் முதலில் மை.பா. நாராயணன் நடித்தார்.

பிறகு ராஜூ முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தில் அமைச்சரின் பி.ஏவாக வந்து ‘கட்டிங் கலாச்சாரம்’ பற்றிப் பேசி அதிர வைத்தார்.

தொடர்ந்து விநோத் இயக்கத்தில் ‘ தீரன் அதிகாரம் ஒன்று’  நேர்கொண்ட பார்வை, பாலாவின் ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது துணிவு படத்தில் இவரது பெயரில் கதாபாத்திரம் வருவது குறித்து ‘டூரிங் டாக்கீஸ்’ இதழுக்காக அவரிடம் கேட்டபோது, “இயக்குநர் விநோத் எனக்கு நல்ல நண்பர். ஏற்கெனவே அவரது  இயக்கத்தில் என்னை நடிக்கவைத்தார். தற்போது துணிவு படத்தில், எனது பெயரை ஒரு கதாபாத்திரத்துக்கு பயன்படுத்தலாமா  என கேட்டார்.. நான், ‘தாராளமாக வையுங்கள்..   என் பெயருக்கு காப்பிரைட், பேடண்ட் உரிமையா வைத்திருக்கிறேன்’  என்று சிரித்தேன். படத்தில் நடிப்பது ஒரு பிரபல்யத்தைத் தரும்… இப்போது என் பெயரே எனக்கு பிரபல்யத்தை அதிகமாக்கி இருக்கிறது.  அதுவும் தல அஜித் படத்தில் எனது பெயர் ஒரு கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டு இருக்கிறது… நண்பர் விநோத்துக்கு நன்றிகள்..” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிச் சிரித்தார் மை.பா.நாராயணன்.

தனது பெயர்க் காரணம் குறித்து கூறிய அவர், ” பலரையும் போல நானும் என் அப்பாவின் முதல் எழுத்தை முன்னெழுத்தாக வைத்து, பா.நாராயணன் என்றே பத்திரிகைகளில் எழுதி வந்தேன். மறைந்த பத்திரிகையாளர் இரா.ஜவகர் ஒரு முறை, ‘உன் அம்மா பெயர் என்ன’ என்றார். ‘மைதிலி’ என்றேன். உடனே அவர், ‘இனி மை.பா. நாராயணன் என்று உனது பெயரை பத்திரிகைகளில் எழுது’ என்றார். அதன்படியே எழுத ஆரம்பித்தேன். பிறகு, அதுவே, ‘மை.பா.’ என சுருங்கி எனது அடையாளம் ஆகிவிட்டது” என்றார் மை.பா. நாராயணன்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், நடிகர் என பன்முகம் கொண்ட, மை.பா.நாராயணன், தற்போது தனது முகம் காட்டாமலேயே துணிவு படத்தின் மூலம் பேசு பொருளாக ஆகி இருக்கிறார்!

- Advertisement -

Read more

Local News