இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் புதிய திரைப்படம் வாரணாசி தற்போது உருவாகி வருகிறது. எம். எம். கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாறன் மற்றும் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா அண்மையில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில், கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிடிஐ நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட பேட்டியில் இசையமைப்பாளர் கீரவாணி, “ரசிகர்கள் மிகப்பெரிய பிரமாண்டத்தைக் காணலாம். வாரணாசி திரைப்படத்தில் இசை மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெறும். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நீங்கள் செய்யும் பணியில் தெளிவும் உறுதியும் இருந்தால் எந்த அழுத்தமும் ஏற்படாது,” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

