ஆந்திராவை சேர்ந்த சுதாகர் சினிமா ஆசையின் காரணமாக சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் பயிற்சி எடுத்தார். இவருடன் தங்கி படித்தவர்தான் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவரை பார்த்த பாரதிராஜா தான் இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நடிக்க வைத்தார்.
அந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி படமாக அமைந்தது. இதனால், ராதிகார் – சுதாகர் ராசியான ஜோடியாக பார்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சுதாகருக்கு வாய்ப்புகள் குவிந்த்தன. ஒரு வருடத்தில் 7 படங்களில் நடித்தார். மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள் என பல படங்களிலும் நடித்தார். வித்தியாசமான ஹேர் ஸ்டைல் அப்பாவியான முகம் என பெண் ரசிகர்களை கவர்ந்தார்.
கிழக்கு போகும் ரயில் வெளியாகி அடுத்த 3 வருடங்கள் சுதாகர் பிஸியான நடிகராக வலம் வந்தார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த சுதாகர் அதன் பிறகு மது – மாது என உல்லாச வாழ்க்கைக்கு அடிமையானார்.
மது போதையிலேயே படப்பிடிப்புக்கு வருவது, ஆறு மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது என அவரின் பெயர் கெட்டுப்போனது. இதனால், அவர் நடிப்பில் உருவான சில படங்கள் பாதியிலேயே நின்றும் போனது. தவறான வழிகாட்டலால் திசை திருப்பபட்ட சுதாகர் டோலிவுட் பக்கம் போனார்.
ஒருமுறை ஒரு தெலுங்கில் படத்தில் தன்னால் ஹீரோவாக நடிக்கமுடியாமல் போக அந்த வாய்ப்பை சிரஞ்சீவிக்கு கொடுத்தவர். ஆனால், இவர் ஆந்திரா போனபோது நிலைமை தலைகீழாக இருந்தது. பெரிய ஹீரோவாக இருந்த சிரஞ்சீவி தான் நடிக்கும் படங்களில் சுதாருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
எப்படியாவது நடிக்க வேண்டும் என்கிற உத்வேகம் ஒருகட்டத்தில் காமெடி வில்லனாக நடித்து கோமாளியாகவே மாறினார். 80களில் பெண்களின் கனவு நாயகனாக வலம்வந்த சுதாகர் 90களில் தெலுங்கு படங்களில் கோமாளியாக மாறினார். இறுதியில் குடிப்பழக்கம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மூளையில் பாதிப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று பின் மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.