டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி நடித்த சூப்பர் ஹிட் படம் ‘சொர்க்கம்’. கே.பாலாஜி, கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, முத்துராமன், ஆர்.எஸ். மனோகர்,எம்.ஆர்.ஆர் வாசு, நாகேஷ், சச்சு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் இதில் நடித்திருந்தனர்.
கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர், பணம்தான் முக்கியம் என்று நினைக்கிறார். ஒருவரின் உதவியால் அவர் வாழ்க்கையில் பணமும் செல்வாக்கும் கூடுகிறது.புகை, மது உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களும் சேர்ந்துகொள்கின்றன. மனைவி, குழந்தையை பிரிகிறார். வில்லனின் சதியில் சிக்கும் சங்கர், ஒரு கட்டத்தில், தவறுக்குத் துணை போவதை உணர்கிறார். ‘சொர்க்கம் என்பது நேர்மையான முன்னேற்றம்தான்’ என்பதைப் புரிந்து கொள்வதுதான் கதை.
இந்த படத்தின் நாயகனாக சிவாஜி,அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயாவும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனம் எழுதியிருந்தார். எம்.எஸ். விஸ்வநாதன் இசை. ஆலங்குடி சோமு எழுதிய ‘பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்’ பாடல் இன்றும் ரசிக்கக்கூடிய பாடலாவே இருக்கிறது.
‘சொல்லாதே யாரும் கேட்டால்’, ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் கோர்த்து வைத்திருந்தேன்’ ஆகிய இந்த படத்தின் இந்தப் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
சென்னை தேவி தியேட்டரில் வெளியான முதல்தமிழ்ப்படம் ‘சொர்க்கம்’தான். பின்னர், தேவி பாரடைஸ்தியேட்டரில் திரையிடப்பட்டது. சிவாஜியின் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் இதே தேதியில் தான்வெளியானது. இரண்டு படங்களும் ஒரே தீபாவளியன்று வெளியாகி நூறு நாளைக் கொண்டாடியது. 1970-ம் ஆண்டு இதே நாளில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.