60களில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இஸ்ரீதர். அந்தக் காலங்களில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், முத்துராமன் என அனைத்து முன்னனி நடிகர்களையும் வைத்து பல வெற்றிப் படங்களை அளித்தவர்.
70களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினார். அதற்காக சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவரது உதவியாளர்களாக இருந்த பி.வாசுவும் சந்தான பாரதியும், ‘ரஜினி, கமல் ஆகியோரை நடிக்க வைக்கலாம். சமீபத்தில் 16 வயதினிலே படம் வெளியாகி ஹிட் ஆகியிருக்கறது’ என கூறினர்.
ஆனால் ஸ்ரீதருக்கு கடுங்கோபமாகி, ‘யாருய்யா அந்த ரஜினி, கமல்? இதுவே பத்து வருடங்களுக்கு முன் என்னிடம் இப்படி பேசியிருந்தால் அவ்வளவுதான்! வெளியே போங்க முதல்ல, நான் கூப்பிடுகிற வரைக்கும் இந்தப் பக்கமே வரக்கூடாது’ என்று துரத்திவிட்டார்.
ஆனால் அதே கமல், ரஜினியை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் ஸ்ரீதர். அதுதான் இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம்.
இந்த சம்பவத்தை விவரித்த பி.வாசு, “எங்களிடம் ஸ்ரீதர் அப்படி கூறிவிட்டாலும், அவரது மகன், மகள் ஆகியோர் ரஜினி, கமல் பற்றி கூறியிருப்பார்கள். அதனால் அடுத்த தலைமுறையின் மனநிலை அறிந்து அவர்களை ஸ்ரீதர் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டு இருக்கலாம்” என்றார்.