தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், தமிழ் திரைப்படங்களில் தமிழ் கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், அவசியம் இருந்தால் மட்டுமே வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த வேண்டும். இல்லை என்றால் தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த வெண்டும் என்று கூறியிருந்தது.
பெப்சி அமைப்பின் இந்த அறிவிப்பு தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்ட சிலர் பெப்சியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துக்களை கூறியிருந்த நிலையில், இந்த தகவல் வெறும் வதந்தி என்று, நடிகர் சங்கத்தின் (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ் திரைப்படதுறையில் மற்ற மொழி நடிகர்களுக்கு வாய்ப்பு இல்லை என்று ஊடகங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட தகவல். தமிழ் திரையுலகில் இந்த மாதிரி தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக முதலில் நானே குரல் கொடுப்பேன். ஏனென்றால், நாம் இப்போது பான்-இந்தியன் படங்களின் சகாப்தத்தில் இருக்கிறோம். மேலும் நமது இந்திய சினிமா துறை உலகமயமாக்கப்பட்டு வருகிறது.
இப்போது திரைப்படங்களுக்கு எல்லா இடங்களிலிருந்தும் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திறமையாளர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் இந்த நேரத்தில், யாரும் அத்தகைய முடிவுகளை எடுக்க மாட்டார்கள். தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை காக்க தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழக எல்லைக்குள் படமாக்கப்பட்ட படங்களில் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று பெப்சி முடிவு செய்துள்ளது.
தமிழ்த் திரையுலகம் பிற துறைகளைச் சேர்ந்த திறமையாளர்களை ஊக்குவிக்கும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. ரங்கா ராவ், சாவித்திரி மற்றும் பலரின் காலங்களிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. எனது நண்பர்களும் சகோதரர்களும் இந்த ஆதாரமற்ற வதந்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து திரைப்படங்களை உருவாக்கி உலக அளவில் எடுத்துச் செல்வோம். நாம் அதை செய்ய முடியும். ஏற்கனவே முன்னேற ஆரம்பித்துவிட்டோம். எனவே ஒற்றுமையாக இருந்து சிறந்த படங்களை எடுப்போம் என கூறியுள்ளார்.