“இந்தியன் – 2’ பட பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். நீதிமன்ற உத்தரவால் இந்தப் பிரச்சனையில் சுமூக சூழல் ஏற்படாது…” என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
“இந்தியன் – 2’ படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக்” கோரி லைகா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
“கடந்த மார்ச் மாதத்துக்குள் ‘இந்தியன்-2’ படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் எங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் ‘இந்தியன்-2’ படத்தை முடிக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்…” என்று லைகா நிறுவனம் கோரியிருந்தது.
இதற்குப் பதில் மனு தாக்கல் செய்திருந்த இயக்குநர் ஷங்கர், “இந்த ‘இந்தியன்-2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகர் விவேக் திடீரென்று இறந்துவிட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது. இதனால் இந்தப் படம் முடிவடைய இன்னும் மிகப் பெரிய கால தாமதமாகும்..” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது “இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திற்கு வெளியே இரு தரப்பினரும் அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்…” என்று நீதிபதிகள் இரு தரப்பினரையும்அறிவுறுத்தினார்கள்.
மேலும் வழக்கையும் வரும் ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.