விக்ரம் பிரபு-அஞ்சலி நாயர் ஜோடியாக நடித்திருக்கும் ‘டாணாக்காரன்’ படம் ஓடிடியில் வெளியாகிறது.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் லால் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கரும், போஸ் வெங்கட்டும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தமிழ், ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், இசை – ஜிப்ரான், பாடல்கள் – சந்துரு, படத் தொகுப்பு – ஃபிலோமின் ராஜ், கலை இயக்கம் – ராகவன், சண்டை இயக்கம் – சாம், நடன இயக்கம் – ஷெரீப், தயாரிப்பு நிர்வாகம் – ராஜாராம், சசிகுமார், மக்கள் தொடர்பு – ஜான்சன், தயாரிப்பு நிறுவனம் – பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன்.
இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான தமிழ் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
இதுவரை நிறைய போலீஸ் கதைகள் வந்திருந்தாலும், போலீசாவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு போலீஸ் அகாதாமியில் கொடுக்கப்படும் பயற்சியை மையப்படுத்தி எந்தப் படமும் வெளிவந்ததில்லை. இந்த டாணாக்காரன் படம் அந்தப் பயற்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அகாதாமியில் கொடுக்கப்படும் கடும் பயிற்சிகள்தான் யார் மீதும் யோசிக்காமல் போலீசார் லத்தியை வீச வைக்கிறது. போலீசின் வன்முறையை பல படங்களில் பார்த்தவர்களுக்கு, போலீசாவதற்கு எத்தனை வன்முறையைத் தாண்டி அவர்கள் வர வேண்டியிருக்கிறது என்னும் இந்த உண்மைக் கதை ஒரு புது அனுபவமாக இருக்கும்.
விக்ரம் பிரபு இதில் போலீஸ் பயிற்சி பெறுபவராக நடித்துள்ளார். சமீபத்தில் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்திருக்கும் படம் இது.
இந்த ‘டாணாக்காரன்’ படத்தினை டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.