Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர், பைனான்ஸியர் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை T.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் பைனான்சியர் உத்தம்சந்த் மற்றும் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சிக்கு  நோட்டீஸ் அனுப்ப சென்னையில் இருக்கும் 20-வது நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இப்போதுவரையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தின் கடைசி நேர வெளியீட்டின்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது சிம்புவின் அப்பாவான நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் தானே முன் வந்து சில கோடிகளுக்குத்தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியதையடுத்து விடியற்காலை காட்சி மட்டும் ரத்தான நிலையில் அன்றைக்கு ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் வெளியானது.

தற்போது ‘மாநாடு’ படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்த உத்தம்சந்த் மற்றும் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இருவருக்கும் எதிராக சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாகி உலகமெங்கும், மற்றும் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.

ஆனால், அந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய தினம் நவம்பர் 24-ம் தேதி படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அவர்கள், ‘மாநாடு’ படத்திற்கு ஏகப்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, பணச் சிக்கல் இருப்பதாகவும்… வேறு வழியில்லாததால் பெருத்த மன வலியோடு ‘படம் நாளைய தினம் வெளியாகாது. படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறேன்’ என்று அதிரடியாக டிவிட்டரில் டிவிட்செய்தார்.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தை வெளியிட காத்திருந்த உலகெங்கிலும் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய திரையரங்க உரிமையாளர்களும் படத்தை வாங்கியிருந்த பட விநியோகதர்கள் பலரும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளராகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய டி.ராஜேந்தர் அவர்களை தொடர்பு கொண்டு எப்படியாவது தலையிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் விநியோகஸ்தர்களுக்கும் ‘மாநாடு’ வெளியிட உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கும் கை கொடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று டி.ராஜேந்தர் அவர்களும், சிம்புவின் தாயாரும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் உஷா ராஜேந்தர் அவர்களும் படத்தை வெளிக்கொண்டு வர களம் இறங்கி அன்று விடிய, விடிய கொட்டும் மழையையும் மிறி போராடினார்கள்.

25-ம் தேதி காலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 5 மணி காட்சி பல திரையரங்குகளில் ரத்தாகி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

இந்த பதட்டமான சூழ்நிலையில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் அவர்களுடைய கணக்கில் ‘மாநாடு’ படத்தின் நெகட்டிவ் மீதான 5 கோடி பாக்கித் தொகையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தர வேண்டும்.

இந்தப் படத்தின் சாட்டிலைட் விற்காத காரணத்தால் இன்றைய நிலையில் சாட்டிலைட் மதிப்பான 5 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.

இதை டி.ராஜேந்தர்தான் பொறுப்பேற்று கொண்டு அவரது மகன் சிலம்பரசன் நடித்து ஐசரி கணேஷ் அவா்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் வெளியீட்டின்போது தருவதாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

மேலும், சாட்டிலைட் உர்மையை விற்று ஒரு வேளை படம் 5 கோடிக்கு கீழே விற்றால் குறைவது எத்தனை கோடியானாலும் அதை டி.ராஜேந்தர்தான் தர வேண்டும் என்று உத்திரவாத கடிதத்தை (கேரண்டி கடிதம்) உத்தம் சந்த் அவர்களே தன் கைப்பட எழுதி டி.ராஜேந்தர் அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கையொப்பமிட மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் திரு.சௌந்தரபாண்டியன் சாட்சி கையொப்பமிட அந்த உத்தரவாத கடிதத்தை பெற்றுக் கொண்டு காலை 8 மணி காட்சிக்குத்தான் ‘மாநாடு‘ படத்தை வெளியிட்டனர்.

ஆனால், இந்தப் படம் வெளியாகாது என்று தயாரிப்பாளர் டிவிட்டரில் அறிவித்த பின்னும் டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷா ராஜேந்தரும் போராடியதற்கு பின்னால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் படம் வெளியாகி வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

காட்சி மாறியது. படம் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் அவர்களும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் டி.ராஜேந்தர் அவர்களுக்கு தெரிவிக்காமலேயே சில தனியார் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உர்மையை விற்பதற்கு முற்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் சென்னை 20-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் ‘மாநாடு’ திரைப்படத்தின் சாட்டிலைட் உர்மை குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசார்த்த கனம் நீதிபதி அவர்கள் முதல் பிரதிவாதி உத்தம் சந்த் அவர்களும், இரண்டாவது பிரதிவாதியான ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளா் சுரேஷ் காமாட்சி அவர்களும் உரிய பதில் அளிக்குமாறு வழக்கை வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News