Thursday, November 21, 2024

சிம்பு தர வேண்டிய கடன்களை செட்டில் செய்ய டி.ராஜேந்தர் சம்மதம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே இருந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

நடிகர் சிம்பு பல தயாரிப்பாளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால் அந்தப் பணத்தை செட்டில் செய்த பின்புதான் அவரது அடுத்தப் படத்தைத் துவக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் கிடுக்கிப்பிடி போட்டது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இந்தத் தடையால் பெரும் சிக்கலுக்குள்ளானது. கடைசியில், “4 நாட்கள் மட்டும் படமெடுத்துக் கொள்கிறோம்” என்ற உத்தரவாதத்துடன் அந்தப் படத்தின் ஷூட்டிங் திருச்செந்தூரில் நடந்தது.

இந்தப் படப்பிடிப்பிற்கு அனுமதி தந்ததற்காக பெப்சி அமைப்பின் மீது கோபப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சியுடனான தங்களது ஒப்பந்தங்களை கேன்ஸல் செய்வதாக அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கத்தை கலைத்துவிட்டு மீண்டும் தாய்ச் சங்கமான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் அந்தச் சங்கத்தைச் சேர்ந்த 8 நிர்வாகிகளும் டி.ராஜேந்தருக்கு கடிதம் எழுதிய கையோடு பகிரங்கமாக வெளியிலும் சொல்லிவிட்டார்கள்.

அந்தச் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இது தொடர்பாக ஆடியோ பதிவினை வெளியிட டி.ராஜேந்தரின் நிலைமை சிக்கலுக்குள்ளாகியது.

இதேபோல் மற்றுமொரு ஆடியோவை வெளியிட்ட சிங்காரவேலன், அந்த ஆடியோவில் டி.ராஜேந்தரிடம் “எப்படியாவது சீக்கிரமாக கடனை செட்டில் செய்யுங்கள்” என்று பேசியது திரையுலகத்தில் அனைத்து சங்கங்களின் வாட்ஸ்அப் குரூப்புகளிலும் பவனி வர.. டி.ராஜேந்தருக்கு பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படு்த்தியது.

இப்போது கடனை செட்டில் செய்யாவிட்டால் மீண்டும் படப்பிடிப்பு துவங்காது என்பதைவிடவும் தான் நிறுவனராக இருக்கும் தயாரிப்பாளர்கள்  சங்கத்தில் இனிமேல் தான் மற்றும் தனது மனைவியைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்கள் என்கிற நிதர்சனத்தை டி.ராஜேந்தர் சற்று காலதாமதமாகவே உணர்ந்திருக்கிறார்.

இதையடுத்து உடனேயே சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுடன் அவரே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், விஜய், முரளி ராமசாமி ஆகியோருக்குத் தர வேண்டிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுத்துவிடுவதாகச் சொல்லிவிட்டார். இதற்காக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பாக்கியில் இருந்து பெற்றுக் கொள்ளவும் சம்மதித்துவிட்டார்.

இன்னொரு பக்கம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்காக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்குத் தர வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையை ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் கிடைக்கப் போகும் சம்பளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும்படியும் டி.ராஜேந்தர் ஒப்புதல் சொல்லிவிட்டாராம்.

மைக்கேல் ராயப்பன் இப்போதுவரையிலும் 8 கோடி ரூபாய் வரையிலும் நஷ்ட ஈடு கேட்கிறாராம். ஆனால், இதில் 4 கோடியை மட்டும் கொடுப்பதற்கு இப்போது டி.ராஜேந்தர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் கெளதம் மேனனின் திரைப்படத்தின் அடுத்தக் கட்ட ஷூட்டிங் மிக விரைவில் துவங்குமாம். இப்போதைக்கு சிம்புவின் கடன் பிரச்சினைகள் இப்படித்தான் பேசி முடிக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News