தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 2019-ம் ஆண்டிற்கான இந்தியத் திரையுலகத்தின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பினை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜாவடேகர் இன்று காலை புதுதில்லியில் அறிவித்தார்.
ஒரு நடிகராக, தயாரிப்பாளராக, இயக்குநராக இந்தியத் திரையுலகத்தில் சாதனை படைத்ததற்காக திரு.ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1975-ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நடிகராக அறிமுகமானார் ரஜினிகாந்த்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளிலும் சேர்த்து இதுவரையிலும் இதுவரையிலும் 183 படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் அவரது 184-வது திரைப்படமாகும்.
இந்திய அளவில் மிக அதிகமாக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரையும் சமீபத்தில் ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார்.
இந்திய அளவில் அனைத்து மொழி திரைக் கலைஞர்களாலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் என்பதால் இந்த தாதா சாகேப் பால்கே விருது இவருக்குப் பொருத்தமானதுதான்.
இதற்கு முந்தைய ஆண்டான 2018-ம் ஆண்டுக்குரிய தாதா சாஹேப் பால்கே விருதினை தனது குரு என்று இப்போதுவரையிலும் ரஜினி சொல்லி வரும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த 2010-ம் ஆண்டில் ரஜினிகாந்தை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரும் இதே விருதினைப் பெற்றிருக்கிறார். ஆக, குருவும், சிஷ்யனுமாக இந்த உயரிய விருதைப் பெற்றிருக்கிறார்கள் என்பது தமிழ்த் திரையுலகத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெகுமதியாகும்.
தமிழ்த் திரையுலகத்தில் இருந்து இதுவரையிலும் பிரசாத் ஸ்டூடியோஸ் அதிபரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத், விஜயா-வாஹினி ஸ்டூடியோஸ் அதிபரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.நாகி ரெட்டி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் என்று நான்கு பேர் இந்த உயரிய விருதினைப் பெற்றிருக்கிறார்கள். ஐந்தாவதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதினைப் பெற்றிருக்கிறார்.
இந்தியத் திரையுலகத்தின் மிக உயரிய விருதினைப் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.