விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது.
இதையடுத்து “சிறிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகி 30 நாட்கள்வரையும், பெரிய படங்கள் 50 நாட்கள்வரையிலும் ஓடிடியிலோ, தொலைக்காட்சிகளிலோ வெளியாகாது என்கிற உறுதிமொழியை கடிதம் மூலமாகக் கொடுத்தால்தான் அந்தப் படங்கள் தியேட்டர்கள் திரையிடப்படும்” என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர்.
இதற்கு தமிழ்த் திரையுலகத்தில் இப்போது இருக்கும் நான்கு தயாரிப்பாளர் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், இந்த நடைமுறைப்படி உறுதிமொழிக் கடிதம் கொடுக்கும் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் திரையிடப்படும் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து அறிவித்துள்ளனர்.
இது குறித்து ‘சுல்தான்’ படத்தின் தயாரிப்பாளரான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த விசயத்தில் சங்கங்களுக்கிடையேயான பரஸ்பர ஒப்புதலால் மட்டுமே சரியான முடிவை அடைய முடியும். திரைப்படத் துறையின் முழு செயல்களையும் ஒரு சங்கம் மட்டுமே தீர்மானிக்க முடியாது.
தொழில் நுட்பம் வளர்ந்து வரும் விதத்தைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்திற்கான சரியான பாதையை அமைப்பது எல்லோருடைய கடமை என்பதை உணர வேண்டும்.
திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும்போதே 30 நாட்களுக்குள் OTT-யில் வெளியான முதல் தமிழ் படம் ‘கைதி.’ அப்போது இது போன்ற சர்ச்சை எதுவும் எழவில்லை.
படத்தைத் தயாரிக்கின்ற தயாரிப்பாளருக்கு தனது படத்தை எப்படி மார்க்கெட் செய்ய வேண்டும் என்கிற உரிமை இருக்கிறது. எனது படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்கிறபோது 30 நாட்களில் OTTயில் படம் வெளியிடப்படும். அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே நான் தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்வதை வழக்கமாக கடைப்பிடித்து வருகிறேன்.
கோடிக்கணக்கில் முதலீடு செய்து தயாரிக்கின்ற தயாரிப்பாளர் படத்தை வெளியிட மற்றவர்களுக்கு கடிதம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. புதிய வியாபார வாய்ப்புகள் உருவாகின்றபோது அதனை எல்லோருக்கும் பயன்படுகிற வகையில் திரைப்பட துறை சார்ந்த சங்கங்கள் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டும்.
அதை தவிர்த்துவிட்டு தனி நபர்கள், சங்கங்கள் தன்னிச்சையாக முடிவுகளை அறிவிப்பது சரியல்ல…” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.