தமிழக அரசு நேற்றுதான் புதிய லாக் டவுன்-2-விற்கான விதிமுறைகளை வெளியிட்டிருந்தது.
அந்த விதிமுறைகளில் “ஏப்ரல் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் 50 சதவிகிதம் அளவுக்கே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்…” என்று உத்தரவிட்டிருந்தது.
இன்றைக்கு அதிலும் சில திருத்தங்களை செய்து வெளியிட்டுள்ளது.
அந்தத் திருத்தத்தில் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சியை நடத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளது.
“இந்தக் காலக்கட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள் முதல் 7 நாட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட காட்சிகளுக்குக் கூடுதலாக ஒரு காட்சியை அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டும் முறைகளைப் பின்பற்றியும், அனைத்துக் காட்சிகளிலும் 50 சதவிகித இருக்கைகளைப் பயன்படுத்தியும் திரையிட அனுமதி தரப்படுகிறது..” என்று அரசு அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்றுதான் வெளியானது. 30 கோடி ரூபாய் செலவில் தயாராகியிருக்கும் அத்திரைப்படம் முழுமையான தியேட்டர் வசூல் கிடைத்தால்தான் தப்பிக்கும் என்ற நிலைமையில் வெளியாகத் தயாரானது.
ஆனால், திடீரென்று கடந்த 8-ம் தேதியன்று “இனிமேல் தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே அனுமதி…” என்று தமிழக அரசு சொல்லிவிட்டதால் அந்தப் படக் குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஆனாலும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தைரியமாக அந்தப் படத்தை நேற்றைக்குத் திரையிட்டுவிட்டார்.
இதற்கிடையில் முதல் நாள் மட்டும் முழுமையான அளவுக்குப் பார்வையாளர்கள் அனுமதி என்பதால் தமிழகம் முழுவதுமே ‘கர்ணன்’ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றது.
ஆனால், இன்று முதல் பாதி தியேட்டர்களில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதித்து வருகிறார்கள். இதனால் தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் பெரிதும் நஷ்டமடைய வாய்ப்புண்டு என்பதால் அனைவரும் கவலைக்குள்ளாகினர்.
தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன் தமிழக அரசின் இந்த முடிவைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். மிக விரைவில் தமிழக கவர்னரை சந்தித்து இது குறித்து மனு அளிக்கப் போவதாக நேற்றைக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு இன்றைக்கு அறிவித்திருக்கும் கூடுதல் சலுகையின்படி தியேட்டர்களில் கூடுதலாக ஒரு காட்சியை படம் வெளியான முதல் 7 நாட்கள் மட்டும் ஓட்டிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்துள்ளது.
இதனால் ‘கர்ணன்’ திரைப்படம் நாளை முதல் தியேட்டர்களில் 6 காட்சிகள் திரையிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வாரத்தில் விடுமுறை தினங்களும் வருவதால் தியேட்டர்களுக்கு கூட்டம் வரும் வாய்ப்பிருக்கிறது.
இதனை மனதில் கொண்டு வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 15-ம் தேதிவரையிலும் ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு கூடுதலான சிறப்புக் காட்சி இருக்கும்.
இதேபோல் இந்த லாக் டவுன்-2 முடியும்வரையிலும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களுக்கு இந்த சலுகையினால் பெரிதான சுமை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.