Saturday, April 13, 2024

சினிமா வரலாறு-19 – ஒரு ரூபாய் சம்பளத்துக்கு நடிக்க தயாராக இருந்த கதாநாயகர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகுந்த கடவுள் பக்தி உள்ளவராக விளங்கிய ஏவி. மெய்யப்ப செட்டியார் அவர்களின் இஷ்ட தெய்வம் முருகர்.

அதனால்தான் அவரது பிள்ளைகளுக்குக்கூட பழனியப்பன், முருகன், குமரன், சரவணன், பாலசுப்ரமணியன் என்று முருகக் கடவுளின் பெயர்களையே வைத்தார்.

முருகக் கடவுளின் திருவிளையாடல்களை ‘ஸ்ரீவள்ளி’ என்ற பெயரிலே தயாரிக்க முடிவு செய்த ஏவி.எம். அவர்கள் அந்தப் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் முருகக் கடவுளின் கோவில்கள் பலவற்றிற்கு சென்று  முருகப் பெருமானிடம் வித்தியாசமான வேண்டுகோள் ஒன்றை வைத்தார்.

“ஸ்ரீவள்ளி திரைப்படம் ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னையும் அறியாமல் நான் சில தவறுகள் செய்யலாம். அதற்காக என்னை மன்னித்துக் கொள் முருகா..” என்று முருகனிடம் மனமார வேண்டிக் கொண்டு வந்த பிறகே… அப்படத்தைத் தொடங்கினார் அவர்.

வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்துவிட்டு முருகர் வேடத்தில் நடிக்க நல்ல குரல் வளம் மிகக் நடிகரை ஏவி.எம். தேடிக் கொண்டிருந்தபோது அவரைத் தேடி வந்தார் டி.ஆர்.மகாலிங்கம்.

“நீங்கள் வள்ளி படம் எடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் படத்தில் நடிக்க எனக்கு நீங்கள் சான்ஸ் கொடுக்க வேண்டும்” என்று கேட்ட மகாலிங்கம் அதோடு நிறுத்தவில்லை, எந்தத் தயாரிப்பாளரையும் கவரக் கூடிய வார்த்தையை அடுத்ததாகச் சொன்னார். “நீங்கள் சம்பளமாக ஒரு ரூபாய் கொடுத்தால் கூட போதும்” என்பதுதான் அடுத்து அவர் சொன்ன அந்த வார்த்தை.

அவர் கேட்ட சம்பளத்தைப் போல மூவாயிரம் மடங்கு சம்பளம் தர ஒப்புக் கொண்ட ஏவி.எம்., அவர்கள் கூடவே ஒரு நிபந்தனையை விதித்தார். ‘ஸ்ரீவள்ளி’ படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக் கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை.

வள்ளியாக நடித்த ருக்மணியின் ஒப்பந்தத்திலும் அப்படி ஒரு நிபந்தனையைப் போட்ட ஏவி.எம்., கூடுதலாக இன்னொரு நிபந்தனையையும் குமாரி ருக்மணியின் ஒப்பந்தத்தில் சேர்த்தார். மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து  ஏவி.எம். நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டாவது நிபந்தனை.

ஆனால், அந்த நிபந்தனையை ஏவி.எம்., அவர்களே ரத்து செய்கின்ற சூழ்நிலை ‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம் முடிவடைகின்ற கட்டத்திலே உருவானது.

‘ஸ்ரீவள்ளி’ படத்திலே டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மணி ஆகிய இருவருக்கும் அடுத்து முக்கிய பாத்திரத்தில் நடித்தது ஒரு யானை. படம் முழுவதும் டி.ஆர்.மகாலிங்கத்திற்கும், குமாரி ருக்மணிக்கும் யானையோடு பல காட்சிகள் இருந்ததால் அந்த யானையோடு தினமும் அவர்களை பழக வைத்தார் ஏவி.எம்.

அப்போது டி.ஆர்.மகாலிங்கம் மைலாப்பூர் மாட விதியில் ஒரு வீட்டின் மாடியில் முப்பது ரூபாய் வாடகையில் குடியிருந்தார். காலையில் வீட்டிலேயே டிபன் எல்லாம் சாப்பிட்டுவிட்டு ஸ்டுடியோவிற்கு வர தயாராக இருப்பார் அவர். ஏவி.எம்.மின் ஆஸ்டின் கார் மாம்பலத்துக்கு சென்று முதலில் குமாரி ருக்மணியை ஏற்றிக் கொண்டு, அதன் பின்னர் மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு ஸ்டுடியோ வந்து சேரும்.

ஸ்டுடியோவில் நுழைந்தவுடன் அவர்கள் இருவரும் வாசலில் கட்டிப் போடப்பட்டிருக்கும் யானைக்கு வெல்லமும், தேங்காயும் கொடுத்து அந்த யானையுடன் சிறிது நேரம் பழகிவிட்டுத்தான் ஸ்டுடியோவிற்குள்ளே வருவார்கள்.

இப்படி யானையோடு அவர்கள் தினமும் பழகியதில் அந்த யானை அவர்களோடு மிகவும் நெருக்கமாகிவிட்டது. குமாரி ருக்மணி “நில்” என்றால் நிற்கும். “உட்கார்” என்றார் உட்காரும்.

இப்படி, அந்த யானையோடு குமரி ருக்மணிக்கும் டி.ஆர்.மகாலிங்கத்துக்கும் இருந்த நெருக்கம் ‘ஸ்ரீவள்ளி’ படத்தின் படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தது.

யானை தனது துதிக்கையால் ருக்மணியைத் தூக்கி, முருகர் மடியில் வீசுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது அந்த யானை மிகவும் லாவகமாக ருக்மணிக்கு கொஞ்சம்கூட  வலி ஏற்படாத அளவில்  பூ போல அவரைத் தூக்கி வீசியது. அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது அந்த யானை மட்டும் கொஞ்சம் அழுத்திப் பிடித்திருந்தால் ருக்மணியின் இடுப்பு எலும்பு ஒன்றுகூட தப்பியிருக்காது.

“எந்த ஒரு படத்தையும் உருவாக்குவதற்கு முன்னர் அந்தப் படத்திற்கு முழு ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அந்தப் படம் தரமான படமாக இருக்கும்” என்று இப்போது கமல்ஹாசன் பல பேட்டிகளில் சொல்லி வருகிறார் அல்லவா… அதை 1945-ம் ஆண்டிலேயே செயல்படுத்தியவர் ஏவி.மெய்யப்ப செட்டியார். 

“அப்போது அந்தப் படத்தை எடுப்பதைத் தவிர வேறு வேலை எங்களுக்குக் கிடையாது என்பதால் எங்கள் முழு கவனமும் ஸ்ரீவள்ளி படத்தை உருவாக்குவதில்தான் இருந்தது. காலையில் எனது பங்குதாரரான சுப்பையாவையும், உதவி இயக்குநரான ஏ.டி.கிருஷ்ணசாமியையும் அழைத்துக் கொண்டு ஸ்டுடியோவிற்கு வந்து விடுவேன்.

நானோ, கிருஷ்ணசாமியோ அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் இல்லை என்பதால் பல முறை ரிகர்சல் பார்ப்போம். ‘மகாலிங்கம் நீ வசனத்தை இப்படி சொல்’, ‘ருக்மணி நீ இப்படி நடி’ என்று பல முறை அவர்களை நடிக்கச் சொல்லி ரிகர்சல் பார்த்து எங்களுக்கு திருப்தி ஏற்பட்ட பிறகே டேக் எடுப்போம்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் ஏவி.எம்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முழு படத்தையும் போட்டுப் பார்த்தார் ஏவி எம். கதாநாயகி ருக்மணி பத்னெட்டு வயதில் பருவத்தின் வாசலில் இருந்ததாலும் அவருக்கு ஜோடியாக நடித்த டி.ஆர். மகாலிங்கத்துக்கு அப்போது இருபத்தோரு  வயதுதான் என்பதாலும் அவர்களது  ஜோடிப் பொருத்தம் மிகவும் அழகாக  அமைந்திருந்தது. நிச்சயம் அந்த ஜோடியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் திரும்பத் திரும்ப படத்திற்கு வருவார்கள் என்று ஏவி. எம். எண்ணினார்.

இருப்பினும், ஒரு விஷயம் அந்த படத்தின் வெற்றியைக் குலைக்கும் என்று அவருக்குத் தோன்றியது. டி.ஆர்.மகாலிங்கத்தின் கணீர்க் குரலுக்கு எதிரில் குமரி ருக்மணியின் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது. அது மட்டுமின்றி அவரது குரலில் இனிமையும் இல்லை. ஆகவே அவரது குரலை மாற்றினால் மட்டுமே படம் வெற்றியடையும் என்ற முடிவுக்கு வந்தார் ஏவி.எம்.

அப்பொழுது வெளியாகியிருந்த ‘சபாபதி’ என்ற படத்தில் அப்போதைய பின்னணிப் பாடகியான பி.ஏ.பெரியநாயகி மிகவும் அருமையாகப் பாடியிருந்தார். ஆகவே, அவரைப் பாட வைத்து அந்தக் குரலை, ருக்மணியின் குரலுக்கு பதிலாக பதிவு செய்வது என்று முடிவெடுத்தார் அவர்.

முடிவெடுப்பது சுலபமாக இருந்தது. ஆனால் செயல்படுத்துவதில் சில சங்கடங்கள் முளைத்தன.

“என் குரலை மற்ற நான் சம்மதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்” குமாரி ருக்மணி. இப்போது செட்டியாருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் குமாரி ருக்மணி ஏன் அப்படி பிடிவாதமாக இருக்கிறார் என்பதைப் பற்றிய ரகசியம் அவருக்குத் தெரிய வந்தது.

தொடர்ந்து மூன்று ஏவி.எம். தயாரிப்புகளில் நடிக்க வேண்டும் என்று குமாரி ருக்மணியுடன் ஏவி.எம். ஒப்பந்தம் போட்டிருந்தார் அல்லவா. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய அந்த சிக்கலான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த ருக்மணி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏவி.எம். சம்மதித்தால் தனது குரலை மாற்ற தான் ஒப்பதல் தருவதாக தெரிவித்தார்.

‘ஸ்ரீவள்ளி’ படத்தை எடுத்தவரை ருக்மணியும் பார்த்திருந்தார். ஆகவே, நிச்சயம் அந்தப் படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது அப்படி அந்தப் படம் வெற்றி பெறும்போது தான்  ஏவி.எம்.முடன் இப்படி ஒரு ஒப்பந்தத்தில் இருந்தால் தன்  விருப்பப்படி படங்களை ஒப்புக் கொள்ள முடியாதே என்பதால்தான் அப்படி ஒரு நிபந்தனையை ஏவி.எம்.மிடம் விதித்தார் ருக்மணி.

இந்த நிபந்தனையை விதிக்கும்போது குமாரி ருக்மணிக்கு வயது பதினெட்டு. அதுதான் அவருக்கு முதல் படம். அந்த கால கட்டத்திலேயே நடிகைகள் எவ்வளவு தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

அவர் இப்படி ஒரு நிபந்தனையை விதித்தவுடன் ஏவி.எம். அது பற்றி யோசித்துப் பார்த்தார். ‘ஸ்ரீவள்ளி’ படம் வெற்றி பெறவில்லையென்றால் குமாரி ருக்மணியுடன் எத்தனை படங்களுக்கு ஒப்பந்தம் போட்டாலும் என்ன பயன் இருக்கப் போகிறது.

படம் ஓடினால்தானே அந்த ஒப்பந்தத்தால் பயன் இருக்கும். ஆகவே அந்த ஒப்பந்தத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை ஓட வைப்பதற்குத்தான் வழி காண வேண்டும் என்று முடிவெடுத்த அவர், உடனடியாக அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தனது ஒப்புதலைத் தெரிவித்தார். 

அதற்குப் பிறகு பெரியநாயகியின் குரலில் பாடலைப் பதிவு செய்து  வெளியிடப்பட்ட ‘ஸ்ரீவள்ளி’ திரைப்படம் அதுவரை ஏவி.எம். எடுத்த எந்தப் படமும்  பெறாத  வெற்றியைப்  பெற்றது.

இரண்டு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தப் படம், இருபது லட்சம்  ரூபாய் லாபத்தை ஈட்டித் தந்தது.

மதுரை சென்டரல் தியேட்டரில் மட்டும் 55 வரங்கள் ஒடி சாதனை புரிந்தது அந்தப் படம்.

- Advertisement -

Read more

Local News