சமீபத்தில் வெளியான ‘செம திமிரு’ திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வகையிலான வசனங்களை நீக்க அந்தப் படக் குழு முடிவு செய்துள்ளது.
கன்னட நடிகரான துருவ் சார்ஜா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘செம திமிரு’. இத்திரைப்படம் கன்னடத்தில் ‘பொகரு’ என்ற பெயரில் உருவாகியிருந்தது.
இந்தப் படத்தில் சில காட்சிகளில் பிராமண சமூகத்தினரை கேலி, கிண்டல் செய்து பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வசனங்கள் தங்களது சமூகத்தினருக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்துவதாக கர்நாடகாவில் பிராமண சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் கன்னட திரையுலகத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது. சென்சார் போர்டு அனுமதித்துவிட்டால் அதற்குப் பிறகு அதில் யாரும் தலையிட முடியாது என்று பல வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம்.. போராட்டம் என்று துவங்கினால் திரையுலகத்தினர் பாதிகப்படுவார்களே..!?
இந்தப் பாதிப்பின் காரணமாக கன்னட பிலிம் சேம்பர் இது தொடர்பாக போராட்டம் நடத்திய கன்னட பிராமணர்கள் அமைப்புகளையும், சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் படத்தில் ஆட்சேபணைக்குரிய வசனங்கள் இடம் பெற்றிருந்த 14 காட்சிகளை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஒத்துக் கொண்டார். இதையடுத்து அங்கே போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.