Friday, April 12, 2024

ஒரே நேரத்தில் தியேட்டர்-ஓடிடி ரிலீஸ்-நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிளாக் விடோ’ என்ற ஹாலிவுட் படத்தைத் தயாரித்த டிஸ்னி நிறுவனத்தின் மீது அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகையான ஸ்கார்லெட் ஜான்ஸன் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் ‘பிளாக் விடோ’ என்ற படத்தைத் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் நடிகை ஸ்கார்லெட் ஜான்ஸன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் கடந்த ஜூலை 9-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. கொரோனா வைரஸ் தாக்குதலினால் பல நாடுகளில் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்ததினால் வசூல் இழப்பினை ஈடுகட்டும் வகையில் தியேட்டரில் இந்தப் படம் ரிலீஸாகும் அதே நேரத்தில், ஓடிடியிலும் வெளியிட்டது டிஸ்னி நிறுவனம்.

ஜூலை 9-ம் தேதியன்று வெளியான இந்த ‘பிளாக் விடோ’ திரைப்படம் வட அமெரிக்காவில் மட்டும் 80 மில்லியன் டாலர்களை குவித்தது. அதே நேரம் உலக அளவிலும் இத்திரைப்படம் 78 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

இதே நேரம் இந்தப் படத்தை 30 டாலர் விலையில் தனது சொந்த ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ்ஸிலும் வெளியிட்டது டிஸ்னி நிறுவனம். இதில் 60 மில்லியன் டாலர்களை இத்திரைப்படம் வசூலித்தது.

இப்படி தியேட்டர்கள் மற்றும் ஓடிடியில் ஒரே நேரத்தில் படம் வெளியானதால் முதல் சில நாட்களிலேயே தியேட்டர்களில் வசூல் குறைந்து போனது.

இத்திரைப்படம் இதுவரையிலும் உலகம் முழுவதுக்குமான மொத்த வசூலாக 319 மில்லியன் டாலர்களை மட்டுமே பெற்றுள்ளது. மார்வல்’ வரிசை திரைப்படங்களில் மிகக் குறைந்த வசூலைப் பெற்ற திரைப்படம் இது மட்டுமே என்கிறது ஹாலிவுட் வட்டாரம்.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஸ்கார்லெட் ஜான்சனுடன் டிஸ்னி நிறுவனம் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி தியேட்டர் வசூலில் அவருக்கு குறிப்பிட்ட சதவிகிதத்தை போனஸாகத் தர வேண்டுமாம்.

ஆனால் இப்படி தியேட்டரிலும், ஓடிடியிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட்டதால் தனக்குரிய போனஸ் தொகை குறைந்து போனதால் அதற்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையைத் தரும்படி நடிகை ஸ்கார்லெட் ஜான்ஸன் லாஸ் ஏன்ஞெ்சல்ஸ் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தொடுத்துள்ள வழக்கில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளரான டிஸ்னி நிறுவனம் என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தியேட்டர்களில் கிடைக்கின்ற வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை எனக்கான போனஸாக அவர்கள் தர வேண்டும். அதோடு நாங்கள் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நான் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் ஓடிடியிலும், தியேட்டர்களிலும் வெளியிடப்படும் என்கிற ஷரத்தே இல்லை. எனவே அது செல்லாது.

தியேட்டர்களிலும், ஓடிடியிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட்டதால் தியேட்டர் வசூல் மிகவும் குறைந்து போயுள்ளது. இதனால் தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய  போனஸ் தொகையும் குறைந்து போயுள்ளதால் அதற்கு ஈடு கட்டும்வகையில் டிஸ்னி நிறுவனம் தகுந்த நஷ்ட ஈட்டினை தர வேண்டும்…” என்று அந்த மனுவில் கோரியுள்ளார் ஸ்கார்லெட் ஜான்ஸன்.

அதே நேரம் “இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்டதால் டிஸ்னி பிளஸ் ஓடிடி நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் உயர்ந்தும், அந்த நிறுவனத்திற்கு தனிப்பட்ட லாபம் அதிகமாகக் கிடைத்துள்ளதாகவும்..” ஸ்கார்லெட் ஜான்ஸன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News