ஒரு திரில்லர் படத்திற்கான அனைத்து அம்சங்களுடன்தான் படத்தின் ஆரம்பக் காட்சியே அமைந்திருக்கிறது.
ஒரு பழமையான பங்களாவில் ஒரு காதல் ஜோடி கொல்லப்படுகிறார்கள். பல ஆண்டுகளாக அந்த பங்களா அனாதையாக இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு அனுஷ்காவும், மாதவனும் அங்கே வருகிறார்கள். இப்படியாக ஆரம்பம் ஆகும் படத்தில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்கள் வருகிறது.
அந்த பங்களாவில் மாதவனுக்கு ஓர் அசம்பாவிதம் நடக்க,.. அதற்கு யார் காரணம் என்ற விசாரணையில் படம் விரிகிறது.
ஒரு பேய்ப் படத்திற்கான சாத்தியங்கள் இருந்தும் படத்தை அந்த ரூட்டில் கொண்டு போகாமல் முழுக்க, முழுக்க க்ரைம், திரில்லரில் பயணிக்க வைத்திருக்கிறார்கள்.
வயலின் செலிபிரட்டியான மாதவனுக்கும் வாய் பேச முடியாத, காது கேட்காத அனுஷ்காவிற்கும் காதல் மலரும் இடங்களும், அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓர் ஓவியக் கவிதை. அனுஷ்கா வரைந்த ஓவியத்தை மாதவன் வாங்கும் காட்சி நல்ல இண்ட்ரெஸ்டிங் ஏரியா.
மாதவனுக்கு வழக்கமான கேரக்டர் இல்லாமல் கொஞ்சம் புகுந்து விளையாடும் இடமும் இருக்கிறது. அளவாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். அனுஷ்கா சவால் மிகுந்த கேரக்டரை ஓரளவு சமாளித்துள்ளார். பெரும்பாலும் படம் முழுதும் அவர் முகம் சோர்வாகவே இருக்கிறது..! Why?
சாலினி பாண்டே கேரக்டர் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரின் காதலனாக வரும் சுப்பாராஜு சூப்பர் ராஜுவாக க்ளைமாக்ஸில் ஈர்க்கிறார். உண்மையைக் கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஞ்சலி. அவர் குரலில் ஒரு போலீஸுக்கான கம்பீரம் இல்லை. ஆனாலும் தனது உடல் மொழியாலும் நடிப்பாலும் கவனம் பெற முயற்சித்துள்ளார்.
படத்தில் வில்லன் போலீஸாக வரும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பல காட்சிகளில் அசால்ட் காட்டி அசத்தியிருக்கிறார். அஞ்சலியின் கணவராக வரும் ஸ்ரீனிவாசஸுக்கு சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் இல்லை.
படத்தின் கலரிங்கும் ஒளிப்பதிவும் ஒரு ஹாலிவுட் படத்திற்கான தரத்தைக் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு சின்ன சின்னக் காட்சிகளிலும் அசத்துகிறது. பின்னணி இசைதான் இப்படியான திரில்லர் படங்களுக்கு ஆன்மா. அதை இசை அமைப்பாளர் சரியாக உள் வாங்கி உழைத்திருக்கிறார். ஆர்ட் டிபார்ட்மெண்டின் டீடெயிலிங் வொர்க்கும் மெச்சத்தக்கது.
ஒரே நேரத்தில் மூன்று மொழியில் எடுக்கப்பட்ட படம் என்பதால் சில இடங்களில் லிப்சிங் பிரச்சனை இருக்கிறது. 2 மணி நேரம்தான் படத்தின் நீளம் என்பதால் திரைக்கதையில் இன்னும் சில ரசவாத விசயங்களை இணைத்திருக்கலாம்.
சி.சி.டிவி புட்டேஜ் லாஜிக்குகளை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம். படத்தின் ஆதார ஜீவனே சாலினி பாண்டேதான் என்பதால் அவரது காதல் காட்சிகளில் இன்னமும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம்.
அஞ்சலியின் இன்வெஸ்டிகேசன், அனுஷ்கா மாதவன் லவ், அனுஷ்கா சாலினி பாண்டே நட்பு, மைக்கேல் கேரக்டரின் வில்லனத்தனம் என்பதைத் தாண்டி படம் ஒரு கட்டத்தில் சின்ன தேக்கநிலையை அடைந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்கும்போது ஒரு பரபரப்பை தொற்ற வைத்து விடுகிறார் இயக்குநர் ஹேமந்த் மதுகர்.
சிறு சிறு லாஜிக் சத்தங்கள் அதிகம் இருந்தாலும், சைலன்ஸ் Mood-ல் பார்த்தால் இந்த சைலன்ஸ் பிடிக்கவே செய்யும்..!