சினிமாவை பொறுத்தவரைக்கும் இளம் நடிகைகளின் மரணம் என்பது எப்போதுமே மர்மமாக தான் இருக்கிறது. அவர்கள் எதற்காக இறந்தார்கள், யாரால் இறந்தார்கள் என்ற உண்மை அவர்களுடனே மறைந்து விடுகிறது. கோலிவுட் சினிமாவில் நடிகை சில்க் ஸ்மிதா தொடங்கி, தொலைக்காட்சி நடிகை வி.ஜே சித்ரா வரைக்கும் இதுதான் நடிகைகளின் நிலைமை.
அப்படி இறந்த நடிகைகளில் ஒருவர் தான் ஷோபா. இவருடைய மறைவு தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய இழப்புதான். ஒரு நொடியில் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகளை காட்டக் கூடிய நடிகை ஷோபா. 17 வயதில் தன்னுடைய சிறந்த நடிப்பினால் ‘பசி’ திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்றார். எத்தனையோ விருதுகளையும், புகழையும் வாங்கி குவிக்க வேண்டிய இவர் தன் வாழ்க்கையை இளம் வயதில் முடித்துக் கொண்டார்.
முள்ளும் மலரும், மூடுபனி, அழியாத கோலங்கள் போன்ற வெற்றிப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஷோபா. இவருக்கும் புகழ்பெற்ற இயக்குனர் பாலு மகேந்திராவுக்கும் காதல் இறந்ததாகவும், சோபாவின் மறைவுக்கு முழுக்க முழுக்க பாலு மகேந்திரா மட்டும்தான் காரணம் என்று அப்போது பேசப்பட்டது. மூடுபனி ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சோபா இறந்துவிட்டார்.
சோபா மறைவிற்குப் பின் ரிலீசான மூடுபனி திரைப்படத்தின் டைட்டில் கார்டில் எனக்கு எல்லாமும் ஆக இருந்த என் மனைவி சோபாவுக்கு சமர்ப்பணம் என போட்டிருக்கிறார். மேலும் ஒரு பேட்டியில் எனக்கும் சோபாவுக்குமான உறவு மற்றும் அவருடைய மரணத்திற்கான காரணம் எனக்கு மட்டுமே தெரியும் அதை நானும் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.