Friday, April 12, 2024

25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பத்திரிகைகள் மீது ஷில்பா ஷெட்டி வழக்கு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தன் பெயரை கெடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டதாகச் சொல்லி பல்வேறு வகையான 29 மீடியா நிறுவனங்கள் மீது மும்பை உயர்நீதி மன்றத்தில் நஷ்ட ஈட்டு வழக்கினை தொடர்ந்துள்ளார்.

ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து, அதனை தனது மொபைல் அப்ளிகேஷனில் வெளியிட்டதாகக் கூறி மும்பை குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த ஆபாசப் பட தயாரிப்பில் ஷில்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை பல்வேறு மீடியாக்களும் எழுதியிருந்தன. இந்நிலையில் அந்த ஊடகங்கள் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி.

அவர் தன் மனுவில், “சமீப நாட்களில் என் பெயரை கெடுக்கும் வகையில் பொய்யான பல செய்திகள் சில ஊடங்களில் வெளியாகியுள்ளன.

ஆபாசப் படங்களை தயாரித்த புகார் மற்றும் அது தொடர்பான விசாரணையில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளால் என் பெயர், கேரக்டர் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னை ஒரு கிரிமினல் போன்று சித்தரித்துள்ளனர். இந்தக் கிரிமினல் விசாரணையால் தன் கணவரை ஒதுக்கிவிட்ட பெண்ணாக என்னைக் காட்டியிருக்கிறார்கள்.

என்னை பற்றிய அவதூறு செய்திகள், வீடியோக்களால் பொது மக்கள், ரசிகர்கள், விளம்பர நிறுவனங்கள், சக கலைஞர்கள் மத்தியில் என் பெயர் கெட்டுவிட்டது. இந்த அவதூறு செய்திகளால் என் குழந்தைகள், வயதான பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரின் பெயரும் கெட்டுவிட்டது. என்னை பற்றிய அவதூறு செய்திகளால் ஏற்பட்ட இழப்பை பணத்தால் சரி செய்ய முடியாது.

என்னை பற்றி தவறான செய்தி வெளியிட்ட அந்த சில ஊடகங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் என்னை பற்றிய தவறான செய்திகளை அகற்றுவதுடன் 25 கோடி ரூபாய் நஷ்டஈட்டையும் அவர்கள் எனக்கு அளிக்க வேண்டும்…” என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், “இந்த ஆபாச பட தயாரிப்பு வழக்கில் ஷில்பா ஷெட்டிக்குத் தொடர்பில்லை என்றோ அவர் குற்றமற்றவர் என்றோ இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. அவரும் இதில் ஒருவராக சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆபாச படத் தயாரிப்பில் பெறப்பட்ட பணத்திற்கான கணக்கு, வழக்குகளை ஆடிட் செய்ய வெளிநாட்டு ஆடிட்டர்களை நியமித்துள்ளோம். அதன் முடிவு வருவதற்கு நீண்ட காலமாகலாம். அந்த அறிக்கை வரும்வரையிலும் யாருக்கும் நாங்கள் ‘குற்றமற்றவர்’ என்ற சான்றிதழைத் தர முடியாது..” என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்றைக்கு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News