‘பாக்ஸ் ஆஃபீஸ் க்வீன்’ என அழைக்கப்பட்ட நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் சில லட்சங்களில் எடுக்கப்பட்ட ஷகிலாவின் படம் கோடிகளில் வசூலானது. தென்னக சினிமாவில் முடி சூடா வசூல் ராணியாக வலம் வந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையோ துரோகத்தாலும், வஞ்சத்தாலும், தனிமையாலும் நிரம்பியது.
படம் அந்தப் பக்கங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சி செய்துள்ளது. ஆனால், படத்தில் சினிமாவிற்கான புனைவுகளே அதிகம்.
இந்த ஷகிலா ஒரு நேரடி ஹிந்திப் படம். தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. ஷகிலாவாக நடித்துள்ள ரிச்சா சத்தாவும் ஒரு ஹிந்தி நடிகை. அதனால் தமிழ் ரசிகர்ளுக்கு, படம் சற்று அந்நியமாகவே இருக்கிறது.
‘நடிகையர் திலகம்’ படத்தில், கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக மாறும் ரசவாதம் அற்புதமாக நிகழ்த்தப்பட்டிருக்கும். ஆனால், இப்படத்தில் ரிச்சா சத்தா, கடைசிவரை ரிச்சா சத்தாவாகத்தான் உள்ளாரே அன்றி ஷகிலாவாக மாறும் ரசவாதம் நிகழவில்லை.
ஷகிலா இளமைக் காலத்தில் வாழ்ந்ததாகக் காட்டப்படும் காட்டப்படும் கேரளக் கிராமம், திரையில் காணும் பொழுது மிக ரம்மியமாக உள்ளது. அந்த ஆறு, ஓடம், பாலம், பள்ளி என ஃப்ளாஷ்-பேக்கில் வரும் காட்சிகள் அனைத்தையும் கவிதையாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சந்தோஷ் ராய் பதாஜே.
வீர் சம்ர்த் மற்றும் மீட் ப்ரோஸின் இசைப்பதிவு டப்பிங் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை அதிகப்படுத்தியுள்ளது.
படம் சில இடங்களில் டாக்குமென்ட்ரி உணர்வைக் கொடுத்தாலும், கமர்ஷியல் சினிமாவுக்கான இலக்கணப்படி, படத்தில் ஒரு வில்லன் உண்டு.
சூப்பர் ஸ்டாரான தனது படங்களினுடைய வசூல் குறைவிற்கு ஷகிலாதான் காரணமென மனம் புகையும் சலீம் எனும் நடிகர், ஷகிலாவின் பிரபல்யத்தைக் குறைத்து, அவரது சினிமா வாழ்விற்கு வேட்டு வைக்கிறார்.
அதை மீறி எழுந்து போராடும் ஷகிலா, எப்படி வஞ்சத்தால் வீழ்த்தப்படுகிறார் என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.
ஷகிலா தனது முதல் திரைப்படமான ‘ப்ளே கேர்ள்ஸ்’-இல், சில்க் ஸ்மிதாவின் தங்கையாக அறிமுகமானார். சில்க் ஸ்மிதாவைத் திரையிலும், மிக அருகில் இருந்தும் ரசித்தவர் ஷகிலா.
சில்க் ஸ்மிதாவின் மென்மையான குணத்தையும், அவர் கண்களில் தெரிந்த உண்மையான அன்பைப் பற்றியும் ஷகிலா தன் சுயசரிதையில் மரியாதையுடனும் நினைவு கூர்ந்திருப்பார். ஆனால், இப்படத்திலோ, சில்க் ஸ்மிதாவையும் ஆணவமான ஒரு நடிகையாகச் சித்தரித்துள்ளனர்.
உண்மை சம்பவங்களைத் தழுவிய படைப்பில், புனைவு தரும் சுதந்திரம் என்பது உண்மையை மறைப்பதோ, மாற்றுவதோ இல்லை; அது இடைவெளியை சுவாரசியமாக இட்டு நிரப்புவதற்கு மட்டுமே என்பதைப் படைப்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஷகிலாவின் உழைப்பு எப்படி சக குடும்பத்தினரால் உறிஞ்சப்பட்டு, ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் அவர் குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டார் என்ற வருத்தமும் வேதனையும்தான், ஷகிலா தன் சுயசரிதையின் மூலம் சக நடிகைகளுக்கும், ரசிகர்களுக்கும் சொல்ல விரும்பியது.
இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், அதைச் சரியாகப் பதிவு செய்துள்ளாரா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
ஷகிலாவின் தனிப்பட்ட ஆசை, ஏக்கம், இழப்பு பற்றிய உணர்வுகளில் கவனம் கொள்ளாமல், ஆண்கள் சூழ்ந்த திரையுலகத்தில் ஷகிலாவிற்கு என்ன நேர்ந்தது என்பதை ஒரு ஆணின் பார்வையிலேயே இத்திரைப்படம் சொல்லியிருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய துரதிருஷ்டம்.