இந்தி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான ‘பதான்’ இந்தித் திரைப்படம், வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது.
‘அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற, பிகினி உடையில், படுகவர்ச்சியுடன் நடனமாடி இருக்கிறார். இது இந்து மதத்தை இழிவு படுத்துகிறது’ என இந்துத்துவ அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த பாடலுக்கு தடை கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர், ‘ஷாருக் கானை நேரில் பார்த்தால் உயிருடன் கொளுத்தி விடுவேன்’ என்று கூறி அதிர்ச்சி கிளப்பினார்.
பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும், குறிப்பிட்ட பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சில இடங்களில், படத்தின் போஸ்டர்கள், பெரிய அளவிலான கட்-அவுட்டுகள் உள்ளிட்டவற்றை கிழித்து, வீசி எறிவதும் நடக்கிறது.
இப்படத்தை வெளியிடக்கூடாது என திரையரங்குகளுக்கும் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி நகரில் பதான் படம் வெளியாக கூடிய திரையரங்குகளுக்குள் பஜ்ரங் தள அமைப்பினர் புகுந்தனர். அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்தும், எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ஷாருக் கான் யார்? அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரது பதான் படம் பற்றியும் எனக்கு தெரியாது” என்றார்.
மேலும், “மக்கள் அசாமை பற்றி கவலைப்பட வேண்டும். இந்தி திரைப்படங்களை பற்றி அல்ல. ஷாருக் கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை, அவர் என்னை தொடர்பு கொண்டால் அதுபற்றி விசாரிப்பேன். சட்டம் மற்றும் ஒழுங்கு மீறப்பட்டு இருந்தால், வழக்கு பதிவு செய்யப்படும்” என கூறினார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அசாம் முதலமைச்சரை, ஷாருக்கான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இது குறித்து தனது டுவிட்டரில் முதலமைச்சர் பிஸ்வா வெளியிட்டு உள்ள செய்தியில், ‘பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று அதிகாலை 2 மணியளவில் தொடர்பு கொண்டு பேசினார். அவரது படம் திரையிட உள்ள திரையரங்கில் நடந்த அசம்பாவித சம்பவம் பற்றி வருத்தம் தெரிவித்து பேசினார். மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை என அவருக்கு உறுதி கூறினேன். இதுபற்றி நாங்கள் விசாரணை செய்து, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று முதலமைச்சர் தெரிவித்தார்.