Friday, April 12, 2024

“சமாதானமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்” – ‘மன்மத லீலை’ தலைப்பு விவகாரத்தில் கோரிக்கை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மன்மத லீலை’ பட டைட்டில் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்கார வடிவேலனின் தன்னிலை விளக்கத்தைத் தொடர்ந்து பதில் அளிக்கும்விதமாக கே.பாலசந்தர் ரசிகர் மன்றத்தின் செயலாளரான ‘கவிதாலயா’ பாபு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

‘கவிதாலயா’ பாபு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ‘மன்மத லீலை’ திரைப்பட பெயர் சர்ச்சை தொடர்பாக தயாரிப்பாளர் திரு.சிங்காரவேலன் அவர்கள் பேசிய ஆடீயோ பதிவை கேட்டோம். இதில் திரு.சிங்காரவேலன் அவர்கள் சொல்லியிருக்கும் தகவல் பொய்யானது.

இயக்குநர் சிகரம்’ அவர்கள், இயக்கிய திரைப்படங்களின் பெயர்கள், கதை, திரைக்கதை, வசனம் என்கிற விசயங்களை, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் மரியாதை நிமித்தமாக முறைப்படி அனுமதி கேட்டு, உரிமை பெற்றுதான் இதுவரை மற்றவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

மேலும், இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் திரு.வெங்கட் பிரபு இது குறித்து ஏன் இதுவரையிலும் பேசவில்லை..?

கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாளர் அவர்களிடம் மன்மத லீலை’ டைட்டில் உரிமையை முறைப்படி, இப்போது தயாரித்துள்ள தயாரிப்பாளரும், இயக்குநர் திரு.வெங்கட் பிரபு அவர்களும் பேசி, படத்தின் பெயர் உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

வெற்றி பெற்ற, பழைய திரைப்படங்களின் பெயர்களை, உரிமையை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் கேட்க தேவையில்லை என்று திரு.சிங்காரவேலன் அவர்கள் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்…?

‘தில்லு முல்லு’ என்கிற திரைப்படத்தின் பெயரையும், கதையையும் உரிமை பெறாமல் மற்றொரு தயாரிப்பாளர் தயாரித்தபோது மறைந்த முன்னாள் இயக்குநர், அமரர் திரு.விசு சார் அவர்கள் மீடீயா மூலமாக பேசி வந்தது… நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது எல்லாம் திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியாதா..?

உதாரணத்திற்கு, சமீபத்தில் திரு.பிரபுதேவா அவர்கள் நடித்து வெளிவரவுள்ள பொய்க்கால் குதிரை’ என்கிற திரைப்படத்தின் பெயரை, சம்மந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் முறைப்படி பேசி உரிமை பெற்றுதான் அவர்கள் அந்த பெயரை பதிவு செய்து கொண்டனர்.

மேலும், நெற்றிக்கண், ‘எதிர் நீச்சல்’, ‘தில்லுமுல்லு’ என்கிற பெயர்களையும், கதைகளையும் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் முறைப்படி பேசித்தான் உரிமையை பெற்றுக் கொண்டனர் என்பதை திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

யார் வேண்டுமானாலும் பழைய வெற்றி விழா கண்ட பிரபலமான திரைப்படங்களின் பெயர்களையோ, கதைகளையோ வைத்துக் கொள்வதற்கு எந்தவிதத்திலும் உரிமையில்லை. உண்மையான தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. அதுதான் மனிதாபிமானம்.

சிந்தித்து நாம் நாமாக நல்லுணர்வோடு, மனசாட்சியோடு மரியாதை நிமித்தமாக சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேசி சமாதானமாக உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமே தவிர, தயாரிப்பாளர் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல என்பதை திரு.சிங்காரவேலன் அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்…” என்று கூறியுள்ளார் கவிதாலயா’ பாபு.

- Advertisement -

Read more

Local News