லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியானது. இது தற்போது யூட்யூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் ட்ரைலரில் விஜய் பேசும் ( தே.ப.) என்ற வசனம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை நீக்கக் கோரி படக்குழுவிற்கு எதிராக இந்து மக்கள் கழகம் சார்பிலும் அகில பாரத் இந்து மகா சபா சார்பிலும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சீமான், “முன்னோட்டத்தில் இருக்கும். தணிக்கையில் அதை மியூட் செய்துவிடுவார்கள். ஒரு படத்தை இயல்பாக எடுக்கும் பொழுது மக்கள் மொழியில் வந்துவிடுகிறது. என் தம்பி வெற்றிமாறன் எடுத்த வடசென்னையில் வந்தது எங்கள் மொழிதான். அதை விட்டுவிட்டு வாருங்கள், அமருங்கள், உட்காருங்கள்… என இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்க முடியாது.
வெப் சீரிஸில் இதைவிட கேவலமான வார்த்தைகள் ரொம்ப கொச்சையாக பேசக்கூடிய வார்த்தைகள் வருகிறது. விஜய் சிகரெட் பிடிப்பதனால் எல்லாரும் பிடிக்கிறார்கள், அவர் சாராயம் குடிக்கிறதனால் எல்லாரும் குடிக்கிறார்கள் எனக் கருத வேண்டியதில்லை. சமூகம் எப்படி கருதுகிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும்.” என்றார்.