‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிப் பேசியபோது, “இந்தத் தேர்தலில் ரஜினி, கமலுக்குக் கொடுக்குற அடில, விஜய் போன்றவர்களெல்லாம் அரசியலுக்கு வர்றதை பத்தி யோசிக்கணும்…” என்று சொல்லியிருந்தார்.
இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சீமானை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். சீமானை ஏக வசனத்தில் பகடி செய்தும், மீம்ஸ்களை கிரியேட் செய்தும் கிண்டல் செய்தும் வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இது பற்றி நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுப் பேசிய சீமான், “விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது..? அவர்களும் எனது தம்பிகள்தான். அவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்.
‘நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம்’ என்று நான் சொல்லவில்லை. ஒரு நடிகர் நடிப்புத் துறையில் இருப்பதால் மட்டுமே அது மட்டுமே தகுதி என்று நினைத்து அரசியலுக்கு வரக் கூடாது. அதை நாங்கள் ஏற்க மாட்டோம். அது எங்களுடைய கோட்பாடும் அல்ல.
தொடக்கக் காலத்தில் இருந்தே தம்பி விஜய் மீது எனக்கு மிகுந்த பேரன்பு உண்டு. நடிகர் சூர்யா தம்பியாவது பல பொதுப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார். துணிந்து பேசியிருக்கிறார்.
இதுபோல்.. குறைந்தபட்சம் சூர்யா அளவுக்காகவாவது மக்கள் பிரச்சினைகளுக்காக விஜய் குரல் கொடுத்திருக் வேண்டும். எதுவுமே செய்யாமல் நடிகராக இருப்பதாலேயே ஓட்டு வாங்கி முதல் அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி..?
‘முதலில் பொதுமக்களுக்காகப் போராடிவிட்டு.. அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற பின்பு அரசியலுக்கு வாருங்கள்’ என்றுதான் சொல்கிறேன்..” என்றார் சீமான்.