வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’. இப்படம் வருகிற (21.04.2023) அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசுகையில், “இயக்குநர் தரணி ராசேந்திரன் முற்றிலுமாக ஒரு புது குழுவை தயார் செய்து இப்படத்தை எடுத்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது. இது ஒரு வரலாறு கிடையாது. பொன்னியின் செல்வன் படமும் வரலாறு கிடையாது. பாகுபலி எப்படி ஒரு கற்பனை கதையோ அது போலத்தான் யாத்திசை படமும்.
தமிழில் இப்படி ஒரு முயற்சி செய்துள்ளார்கள் என்பது புதிது. தமிழ் சினிமாவின் ஒரு பெருமையான படைப்பாக இருக்கிறது. சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலையில் எல்லாம் எந்த மாதிரியான சொல்லாடல் பயன்படுத்தப்பட்டதோ அதே போன்று இதில் பயன்படுத்தியுள்ளார்கள். அது நன்றாக இருக்கிறது. அபகலிப்டோ (Apocalypto) படத்தை விட இப்படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள்.” என்றார்.
அப்போது பொன்னியின் செல்வன் 2 வெளியாகும் சமயத்தில் இப்படம் வெளியாகிறதே என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு, “அது ஒரு பிரம்மாண்டாம்னா இது ஒரு பிரமாண்டம். பொன்னியின் செல்வன் 2 வருவதற்குள் இந்தப் படம் எல்லாரிடத்துலேயும் சேர்ந்திடும்” என பதிலளித்தார்.