ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் ஸ்ரீபதி.
ஒரு டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார். மலையாள நடிகை நியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்-8 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (ஆக-19) மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “எனக்கு தோன்றிய கருத்துக்களை நான் சொல்வேன்.. நடிகராக இருக்க வேண்டுமா, பெரியாரிஸ்ட்டாக இருக்க வேண்டுமா என்றால் பெரியாரிஸ்ட்டாக இருப்பேன்” என்றார்.
மேலும், “மக்களுக்கு சமூக கருத்துக்களை சொல்வதும் அதை சொல்பவர்களுக்கு பின்னால் நிற்பதும்கூட அரசியல் தான். நான் அதைத்தான் செய்து வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்கிறார்.. அது கூட அரசியல் தான். ஒரு பிரபலமான கலைஞன் கோழையாக இருந்தால் கோழையான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு நாம் காரணமாகி விடுவோம் . மற்றபடி, கட்சி ஆரம்பிப்பது என்பதெல்லாம் ஓட்டு அரசியல்” என தனது பேச்சை நிறைவு செய்தார் சத்யராஜ்.
தற்போது இவரது பேச்சு சோசியல் மீடியாவில் பலரும் பகிர்கின்றனர். அதோடு, “தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறிய ரஜினி, அது போன்று செய்திகளில் அடிபடும் விஜய் ஆகியோரைத்தான் ஓட்டு அரசியல் என மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் சத்யராஜ்”என கமெண்ட்டும் செய்து வருகின்றனர்.