தற்போது பெரிய நடிகர்களுக்கு ஒரு படம் வெளியாவதே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானால்..? இந்த இடியாப்ப பிரச்சினையை தற்போது சந்திப்பவர் நடிகர் சசிகுமார்.
இவருடைய படங்கள் மிகப் பிரமாதமாக ஓடி வசூல் சாதனை படைக்காவிட்டாலும் தொடர்ச்சியாக இவருக்கும் படங்கள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இவரும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது சசிகுமார் ‘எம்.ஜி.ஆர்.மகன்’, ‘ராஜவம்சம்’, ‘கொம்புவச்ச சிங்கம்டா’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘முந்தானை முடிச்சு-2’, ‘நா நா’ போன்ற படங்களில் நடித்துள்ளார் அல்லது நடித்து வருகிறார்.
இந்தப் படங்களில் ‘எம்.ஜி.ஆர். மகன்’, ‘ராஜ வம்சம்’, ’கொம்ப வச்ச சிங்கம்டா’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கே தயாராக உள்ளன.
“100 சதவிகித டிக்கெட்டுகளுக்கு அனுமதி” என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது வேகம், வேகமாக புதிய படங்களை வெளியிட அனைத்துத் தயாரிப்பாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர். இதில் சசிகுமாரின் இரண்டு படங்களும் சிக்கியிருக்கின்றன.
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் வரும் நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, இந்தப் படத்துக்கு போட்டியாக, சசிகுமாரின் மற்றொரு படமும் களமிறங்கி உள்ளது. இயக்குநர் கதிர்வேலுவின் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ திரைப்படமும் அதே நவம்பர் 26-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என்று அந்தப் பட நிறுவனமும் அறிவித்துள்ளது.
இப்படி சசிகுமார் நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறையாகும்.
இதனால் தியேட்டர்களை கைப்பற்றுவதில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டுமே சசிகுமார் நடித்திருப்பது என்றாலும் மற்றைய படங்கள் ஏதேனும் வந்துவிட்டால் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஏதாவது ஒரு படம்தான் சசிகுமாருக்குத் தர முடியும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சுணக்கம் காட்டுகிறார்களாம்.
இன்னொரு பக்கம் ஏதாவது ஒரு படம் சுமாராக இருந்து கூட்டம் குறைந்தால் அது அடுத்தப் படத்தையும் பாதிக்குமே.. இதனால் தான் நடித்திருக்கும் அடுத்த படங்களுக்கு பாதிப்பு வருமே என்று சசிகுமார் வருத்தப்படுகிறாராம். எப்படியிருந்தாலும் இதில் சிக்கல் சசிகுமாருக்குத்தான் இருக்கிறது.
கடைசி நிமிடத்தில் ஏதாவது ஒரு படத்தை அடுத்த மாதத்திற்கு தள்ள வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘எம்.ஜி.ஆர். மகன்’ திரைப்படம் வருகிற நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தின ஸ்பெஷலாக நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.