Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

பதுங்கு குழியில் படமான ‘சல்லியர்கள்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

போர்க் களத்தை மையப்படுத்தி தமிழில் வெகு சில படங்களே வெளியாகியுள்ளன. அந்த வகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில், ஈழத்தில் நடந்த போரை மையப்படுத்தி ‘சல்லியர்கள்’ என்கிற படம் உருவாகியுள்ளது.

நடிகர் கருணாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி’ புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்களே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – கருணாஸ், இணை தயாரிப்பு – நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார், எழுத்து, இயக்கம் – கிட்டு, ஒளிப்பதிவு – சிபி சதாசிவம், இசை – பிரவீண் குமார், படத் தொகுப்பு – சி.எம்.இளங்கோவன், கலை இயக்கம் – முஜிபூர் ரஹ்மான், சண்டை இயக்கம் – எஸ்.ஆர்.சரவணன், ஒப்பனை – அப்துல், வி.எப்.எக்ஸ். – சதீஷ் சேகர், மக்கள் தொடர்பு – A.ஜான்.

தலைவர் பிரபாகரனின் ஆரம்பக் கட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுதான் இந்த ‘சல்லியர்கள்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

போர்க் களத்தில்கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க் களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க் களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினார்கள்? தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றினார்களா என்பது பற்றியும் இந்தப் படம் ரொம்பவே ஆழமாக விவரிக்கும்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் கிட்டு கூறும்போது, “ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே நம் தமிழர்களின் போர்ப் படையில் மருத்துவ பிரிவு இருந்துள்ளது. அப்படி ராஜேந்திர சோழனின் படைப் பிரிவில் முக்கியமான படைப் பிரிவாக சல்லியர்கள்’  என்பவர்கள் பணியாற்றி உள்ளனர்.

போரின்போது வீரர்கள் உடலில் பாய்ந்த ஆயுதங்களை அகற்றி காயங்களுக்கு மருத்துவம் பார்ப்பது இவர்களின் பணியாக இருந்துள்ளது. திருமுக்கூடல் கல்வெட்டில் இதற்கான ஆதாரங்களும் உள்ளன.

தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஒரு புதிய லேயரை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். இது போன்ற கதைகள், இன்னும் சொல்லப்படாமால் இருக்கும் வலிகள் நிறைய இருக்கின்றன.

நான் இயக்கிய மேதகு’ படத்தை பார்த்துவிட்டு என்னை அழைத்து கதைகேட்ட கருணாஸ் மறுநாளே அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பிக்கச் சொன்னார்.

படத்தில் முக்கால் மணி நேரம் ஒரு முக்கிய பகுதியில் காட்சிகள் நடைபெறும். அப்படி ஒரு களத்தை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பொதுவாக நம் படங்களில் போர்க்கள மருத்துவமனை என்றாலே இதுவரை வெட்டவெளியில் ஒரு டெண்ட் அமைத்து சிகிச்சை அளிப்பது போலத்தான் காண்பித்திருப்பார்கள். ஆனால் முதன் முறையாக இந்தப் படத்திற்காக பதுங்கு குழிக்குள் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம்.

செட் போட்டு படமாக்கினால் அதில் செயற்கைத் தன்மை அப்பட்டமாக வெளியில் தெரியும் என்பதால், இந்த மருத்துவமனை காட்சிகள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிஜமாகவே மண்ணுக்கு கீழே பதுங்கு குழி தோண்டி அதில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்பதில் கலை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான் உறுதியாக இருந்தார். அப்படி அமைக்கப்பட்ட மருத்துவமனைக்குள்தான் முக்கால் மணி நேர காட்சிகளைப் படமாக்கினோம்.

அப்படி மண்ணுக்கடியில் சென்று இந்த காட்சிகளை படமாக்கியது மிகப் பெரிய சவாலாக இருந்தது. போர்க் களம் மற்றும் பதுங்கு குழி காட்சிகளை சிவகங்கை பகுதியில் படமாக்கினோம். போர்க் கள சண்டைக் காட்சிகளை பிரபாகரன் என்பவர் அழகாக வடிவமைத்துக் கொடுத்தார்.

தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. படத்தை தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம்…” எனக் கூறினார்.

- Advertisement -

Read more

Local News