Friday, April 12, 2024

RRR – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியத் திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குநர் S.S.ராஜமௌலி இயக்கியிருக்கும் புதிய படம்தான் இந்த ஆர்.ஆர்.ஆர்.’

இந்தப் படத்தை DVV எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமூத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், இங்கிலாந்து நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், ஒலிவியா மோரிஸ்,  அலிசன் டூடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தெலுங்கு மண்ணில் இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்திப் போராடிய அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரைப் பற்றிய படம் என்றுதான் இந்தப் படம் ஆரம்பித்த நாளிலிருந்தே சொல்லி வந்தார்கள்.

ஆனால், அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல், அவர்களது பெயர்களை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையில் உருவான திரைக்கதையில், ஒரு கமர்ஷியல் சினிமாவாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி.

ஆர்.ஆர்.ஆர்.’ என்தற்கு தமிழில் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்று பொருத்தமாகப் பெயர் விளக்கமும் கொடுத்திருக்கிறார்  இயக்குநர் ராஜமெளலி.

படத்தில் அல்லூரி சீதாராமாக’ நடிகர் ராம் சரணும், ‘கோமரம் பீம்மாக’ நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் நடித்துள்ளனர். ‘சீதா’வாக அலியாபட் நடித்துள்ளார்.

1920-களில் அதிலாபாத்’ என்னும் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காடு சார்ந்த பகுதியில்தான் இந்தப் படம் ஆரம்பிக்கிறது.

டில்லியில் அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் கவர்னரான ஸ்காட் துரை தனது மனைவியுடன் ஆந்திராவுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். அடிலாபாத் அருகேயிருக்கும் காட்டுப் பகுதிக்கு வேட்டைக்கு வருகிறார் கவர்னர்.

இவரது மனைவியான அலிசன் டூடி, அங்கேயிருக்கும் பழங்குடியினப் பெண்களிடையே பேசிக் கொண்டிருக்கும்போது மல்லி’ என்ற சிறுமி கவர்னரின் மனைவியின் கைகளில் அழகாக ஓவியம் வரைந்து கொடுக்கிறார்.

இந்தக் கலையில் தனது மனதைப் பறி கொடுத்த கவர்னரின் மனைவி, மல்லியைத் தன்னோடு டெல்லிக்கு தூக்கிச் சென்று விடுகிறார். இதையடுத்து அந்தப் பழங்குடியினத்தின் காப்பாளனாக இருக்கும் கொமரம் பீம்’ என்ற ஜூனியர் என்.டி.ஆர்., மல்லியை பிரிட்டிஷ் கவர்னரின் பிடியில் இருந்து மீட்பதற்காக டில்லிக்கு தனக்கு நெருக்கமான சிலருடன் வருகிறார்.

இந்தத் தகவல் டெல்லி கவர்னருக்கும் தெரிய வருகிறது. உடனேயே அவர் நாட்டில் உள்ள அனைத்து காவல்துறை உயரதிகாரிகளையும் அழைத்துப் பேசுகிறார். “கொமரம் பீமைத் தேடிக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு சிறப்புப் பரிசும், பதவி உயர்வும் கிடைக்கும்..” என்று கவர்னரின் மனைவியே அறிவிக்கிறார்.

இதைக் கேட்கும் பிரிட்டிஷாரின் போலீஸ் படையில் காவல் அதிகாரியாக இருக்கும் அல்லூரி சீதாராம ராஜூ’ என்ற ராம் சரண் அந்தப் பொறுப்பைத் தான் ஏற்பதாகச் சொல்லி கவர்னரிடம் அனுமதியைப் பெறுகிறார்.

ஒரு பக்கம் என்.டி.ஆர்., மல்லியைத் தேட.. இன்னொரு பக்கம் என்.டி.ஆரை ராம் சரண் தேடிக் கொண்டிருக்கிறார். சந்தர்ப்பவசத்தால் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் யார் என்று தெரிந்து கொள்ளாமலேயே நண்பர்களாகிறார்கள்.

இவர்களிடையே நட்பு பெருகி என்.டி.ஆரின் காதலுக்கு ராம் சரண் உதவி செய்து, காதலை வளர்த்துவிட வைக்கிறார். மறுபக்கம்  கவர்னர் மாளிகைக்குள் மல்லியைக் கண்டறிந்த என்.டி.ஆர். ஒரு விழா நாளில் கவர்னர் மாளிகைக்குள்ளேயே போய் மல்லியைக் காப்பாற்ற நினைக்க.. ஒரு காவல் துறை அதிகாரியாய் அதைத் தடுக்க வருகிறார் ராம் சரண்.

அதுவரையிலும் நண்பர்களாக இருந்த அவர்களுக்கு அப்போதுதான் ஒருவரையொருவர் யாரென்று தெரிகிறது. இதையடுத்து நண்பர்களுக்குள் பகையுண்டாகி இதனால் விளையும் ரத்தம் தெறிக்கும் வீர விளையாட்டுதான் இந்த மூன்று மணி நேர பிரம்மாண்டமான விருந்தாக திரையில் குருதி கொட்டியிருக்கும் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ படம்.

இரு வேறு முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையில் இருக்கும் சில ஒற்றுமைகளை ஒன்றிணைத்து, அவர்கள் போராளிகளாக ஆவதற்கு முன் நண்பர்களாக வாழ்ந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்கிற தன் கனவுக்குப் பிரம்மாண்டமான காட்சிகளால் திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.

இதற்கு அவருக்கு உறுதுணையாகத் தோள் கொடுத்திருக்கிறார்கள் படத்தின் நாயகர்களான ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும்..! 

1920-ல் அப்போதைய இந்தியாவின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதி ராய், கொல்கத்தாவில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்படுகிறார். இதை எதிர்த்து அடிலாபாத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக 2000-க்கும் மேற்பட்ட மக்கள் போராடுகிறார்கள்.

இந்தப் போராட்டக் களத்தில்தான் ராம் சரண் ஒரு மாஸ் ஹீரோவுக்குரிய அடையாளத்துடன் அறிமுகமாகிறார். கூட்டத்தில் இருக்கும் ஒருவன் கல்லை எடுத்து எறிய, அது மிகச் சரியாக அப்போதைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மன்னரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் புகைப்படத்தின் கண்ணாடியை உடைத்துக் கீழே விழுக வைக்கிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் பிரிட்டிஷ் அதிகாரி அவனைப் பிடிக்க உத்தரவிடுகிறார். இப்போதுதான் தனது கொடூர முகத்தைக் காட்டும் ராம் சரண் ஆவேசமாக அந்தக் கூட்டத்திற்கு நடுவில் குதித்து அத்தனை பேரையும் இரக்கமே இல்லாமல் கொடூரமாக லத்தி சார்ஜ் செய்து அடித்து நொறுக்குகிறார். இந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கும்விதமே படம் வேறு மாதிரியானது என்பதைத் துவக்கத்திலேயே நமக்கு உணர்த்திவிடுகிறது.

இதேபோல் மல்லியைத் தேடி டெல்லிக்கு தனது ஆட்களுடன் வந்திருக்கும் என்டிஆர். நடுக்காட்டில் அறிமுகமாகும் காட்சியும் அவரது ரசிகர்களை நிச்சயமாக உற்சாகப்படு்த்தியிருக்கும். குழந்தைகளும் இந்தக் காட்சியைக் கொண்டாடுவார்கள் என்பதை தெளிவாக புரிந்து வைத்துதான் இயக்குநர் ராஜமெளலி இந்தத் திரைக்கதையை அமைத்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

படத்தின் முதல் பாதி முழுவதும் ஜூனியர் என்.டி.ஆர். ஆதிக்கம் செலுத்தும் வகையிலும், இரண்டாம் பாதியில் ராம்சரண் ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், இரண்டு தரப்பு ரசிகர்களையும் ராஜமௌலி சமரசம் செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனாலும், படத்தின் முடிவில் ராம் சரணுக்கே அண்டை மாநிலங்களில் கூடுதல் ரசிகர்களின் கூட்டத்தை உருவாக்கும்விதமாக, அவரது காட்சிகள் அமைந்துள்ளது.

ஆனாலும், இந்த இரண்டு ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு இருவரின் கதாபாத்திரங்களும் குதிரை ரேஸில் மாறி, மாறி வருவதைப் போல… முன்னுக்கு வந்து, இறுதியில் ஒன்றாகவே இறுதிக் கோட்டை வெற்றிகரமாகத் தொட்டிருக்கின்றன.

படத்தில் ராம் சரணைவிட, ஒரு சில இடங்களில் மட்டும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் மிளிர்கிறார். சவுக்கடி கொடுத்து பீமின் உடலை பிய்த்து எடுக்கும் காட்சியில், “மன்னிப்பு கேள்; உயிருடன் விட்டுவிடுவார்கள்” என ராம் சொல்ல “மன்னிப்பு கேட்க முடியாது” என மறுத்து என்.டி.ஆர். ஒரு தேசப் பக்திப் பாடலை பாடும் காட்சி உணர்ச்சிப் பொங்கல்..!

அதேபோல் இடைவேளை பிளாக்கில் பாம்புக் கடியில் இருந்து காப்பாற்றிய நண்பனின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் அவனைக் கைது செய்யத் துடிக்கும் ராம் சரணின் நடிப்பும், “என் கண்ணைப் பார்த்து பேசு அண்ணா…” என்று என்.டி.ஆர். கதறும் காட்சியும் உணர்ச்சிப் பிழம்பு..!

ஒரு சிறப்புத் தோற்றத்தில் அஜய் தேவ்கன் பிளாஷ்பேக் காட்சிகளில் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட அந்த துப்பாக்கிச் சண்டையை அமைத்தவிதத்தில் அது படத்தில் தவறவிடக் கூடாத காட்சிகளில் ஒன்றாகிவிட்டது. இந்தக் காட்சியிலேயே வரும் சென்டிமெண்ட் தருணமும் படத்துக்குச் சரியானவிதத்தில் பலம் சேர்த்திருக்கிறது.

ராம் சரணின் காதலியாக ஆலியா பட், மாமாவாக சமுத்திரக்கனி, அஜய் தேவ்கனின் மனைவியாக ஷ்ரேயா ஆகியோர் தங்களுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

டெல்லி கவர்னர் ஸ்காட் துரையாக ரே ஸ்டீவன்சன் தனது முக பாவனையிலேயே மிரட்டியிருக்கிறார். அவரின் மனைவியாக நடித்திருக்கும் அலிசன் டூடி கொடூர வில்லியாகப் பயமுறுத்தியிருக்கிறார். ஜென்னியாக நடித்திருக்கும் ஒலிவியா மோரிஸும்  கதையின் ஓட்டத்துக்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.

மதன் கார்க்கி தமிழில் பாடல்களையும், தமிழ்ப் பதிப்புக்கான வசனங்களையும் எழுதியுள்ளார். ஒரு சில வசனங்கள் தெறிக்க விடுகின்றன. ஆனாலும் செந்தமிழில் வசனங்கள் இருப்பது ஒரு குறையாகத்தான் தோன்றுகிறது.

‘யுத்தத்தைத் தேடி ஆயுதம் தன்னாலேயே வரும்’, ‘நரிகளை வேட்டையாடி என்ன செய்யப் போறோம்; கொம்போட அலையற பேயைக் கொல்லலாம் வா’ போன்ற வசனங்கள் படத்தின் டெம்போவை எகிற வைக்கின்றன. அதேபோல் Brown Beggars’ என்று இந்தியர்கள் குறித்து ஆங்கிலேய அதிகாரிகள் சொல்லும் வார்த்தைகள் நமக்கு கோபத்தைக் கிளறுகிறது.

படத்தின் மிகப் பெரிய பலமே ஆக்ஷன் காட்சிகளும், அது உருவாக்கப்பட்ட விதமும்தான். பேப்பரில் ஸ்க்ரிப்டாக, ஸ்டோரி போர்டாகக் கனவு கண்ட காட்சிகளுக்கு எந்தவித சமரசமுமின்றி பக்காவாக உயிர் கொடுத்திருக்கிறார்கள் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள்.

இடைவேளை பிளாக்கில் நெருப்புடன் ராம் சரணும், நீரூடன் ஜூனியர் என்.டி.ஆரும் மோதிக் கொள்ளும் அந்த நீரும், நெருப்பும் காட்சி இந்திய சினிமாவிலேயே இதுவரை பார்த்திராதது.

இவர்கள் இருவரும் இணைந்து ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்குப் போட்டிப் போட்டு ஆடும் நடனமும் தியேட்டரிலேயே கொண்டாட்டத்தைக் கூட்டியிருக்கிறது.

இடைவேளைக்குப் பின்பு இந்த இருவரும் இணைந்து போராடும் சூழலை உருவாக்கும் கதையும், திரைக்கதையின் டிவிஸ்ட்டும் லாஜிக் எல்லை மீறாமல் அமைந்துள்ளது.

முதல் ஷாட்டில் இருந்து கடைசியான நடனக் காட்சிவரையிலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார் காட்டியிருக்கும் ஒளிப்பதிவும், விசுவல் எஃபக்ட்ஸூம் இந்திய சினிமா தொழில் நுட்பத்தில் இந்தப் படம் செய்து காட்டியிருக்கும் வித்தை என்றே சொல்லலாம்.

சண்டை இயக்குநர்கள் தங்களது ஒட்டு மொத்த வித்தையையும் இந்தப் படத்திலேயே காட்டிவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆற்றுக்குள் அனாதையாய் நிற்கும் அந்தச் சிறுவனைக் காப்பாற்றும் காட்சி, இடைவேளைக்கு முன் வரும் அந்தப் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி, ராம் சரண் – ஜூனியர் என்.டி.ஆர் மோதல், பின்னர் கிளைமேக்ஸில் வரும் சண்டை என எல்லாமுமே நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்கின்றன.

படம் முழுவதும் காட்சிகளுக்கு உயிரோட்டமாக ஒலித்திருக்கிறது எம்.எம்.கீரவாணியின் பின்னணி இசை. பாடல்கள் ஒரு பக்கம் குதூகுலத்தையும், கண்ணில் ஈரத்தையும் வரவழைக்கின்றன. அதே சமயம் எழுந்து, நடனமாடவும் வைத்திருக்கிறது.

படத்தின் இறுதியில் திரைக்கதைக்காக அமைக்கப்பட்டிருக்கும் வில்லுடன் ராமர் என்ற கேரக்டர் வடிவமும், ராம அவதாரமும், காவிக் கொடிகளின் காட்சியும் இந்திய அரசியலை உதாரணப்படுத்துகிறது. ஆனால் ‘வில்’ என்றாலே ‘ராமர்’ என்பதாகத்தான் அர்த்தம். அதற்காகத்தான் ராம் சரணை, ராமராக இயக்குநர் உருவகப்படுத்தியிருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு வருட எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல் திரையரங்குகளில் பிரம்மாண்ட விருந்தினை படைத்திருக்கிறது இந்தப் படக் குழு.

இயக்குநர் ராஜமெளலியின் இயக்கம், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் முழு அர்ப்பணிப்பான நடிப்பு, இசையமைப்பாளர் மரகதமணியின் இன்னிசை, கே.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு என காட்சிக்கு காட்சி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கும்விதமாகத்தான் இந்தப் படத்தின் மேக்கிங் அமைந்துள்ளது.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கமர்ஷியல் படங்களை அதற்குரிய ஜனரஞ்சகத் தன்மையுடன் இயக்கி வெற்றி பெற வைக்க ஒரு சில இயக்குநர்களால் மட்டுமே முடியும். அதில் தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டுமொருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.

காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என ராஜமௌலி எடுத்துக் கொண்ட முயற்சி, இத்திரைப்படம் இதுவரை இந்திய சினிமா பார்த்திடாத பிரம்மாண்டமான திரைப்படமாக ரசிகர்களின் கண்களுக்கு தெரிகிறது.

ராம் சரணை நெருப்பு’ என்றும் ஜூனியர் என்டிஆரை நீர்’ என்றும் உருவகப்படுத்திக் கொண்ட கருப் பொருளை, படம் முழுக்க நேர்த்தியுடன் கையாண்டுள்ளது பாராட்டுக்குரியது.

படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தைத் தாண்டி இருந்தாலும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு  படத்தின் நீளம் ஒரு பொருட்டாகவே அமையாதது இயக்குநர் ராஜமௌலியின் மேஜிக் திறமையைத்தான் காட்டுகிறது.

இந்த ஆர்.ஆர்.ஆர்.’ அனைத்து விதத்திலும் இந்திய சினிமாவின் முக்கியமான ஒரு படமாக அமைந்திருக்கிறது. அதே சமயம் மிஸ் பண்ணக் கூடாத படமும்கூட..!

அவசியம் பாருங்கள்..!

RATING : 4.5 / 5

- Advertisement -

Read more

Local News