சித்தா படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில், நடிகர் விக்ரம் தனது 62வது படமாக வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ரியா ஷிபு தயாரித்துள்ளார் மற்றும் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படம் மதுரையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வீர தீர சூரன் திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரும் இசையும் வெளியிடும் விழா நேற்று வேல் டெக் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேடையில் நடிகர் விக்ரம், நடிகை துஷரா, எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு மற்றும் இளம் தயாரிப்பாளரான ரியா ஷிபு பேசினர்.

அவர்களில், ரியா ஷிபுவின் பேச்சு இணையத்தில் பலரது கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவரது பேச்சு மிக தெளிவாகவும், மிகுந்த உற்சாகத்துடனும் இருந்ததால், நிகழ்ச்சியில் இருந்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.இப்போது பலரும், “யார் இந்த ரியா ஷிபு?” என்று ஆர்வமுடன் கேட்கத் தொடங்கியுள்ளனர். ரியா ஷிபு வெறும் 20 வயது தான். ஆனால், HR பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரது தந்தை ஷிபு, மலையாள திரையுலகில் மிகப் பெரிய திரைப்பட விநியோகஸ்தராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஷிபுவின் தயாரிப்பு நிறுவனமான தமீன் பிலிம்ஸ் மூலம், பல தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களை தயாரித்தும், விநியோகித்தும் உள்ளார். புலி, இருமுகன், RRR போன்ற வெற்றி படங்களை தமிழில் தயாரித்த அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது, HR பிக்சர்ஸ் நிறுவனம் தக்ஸ், முரா, மற்றும் தற்போது வீர தீர சூரன் என்ற திரைப்படங்களை தயாரித்துள்ளது. இதில், வீர தீர சூரன் தான் இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.