ஷாருக்கானின் பதான், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி உள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்திருக்கும் ஷாருக்கான் அதிரடி ஹீரோவாக தூள் கிளப்பி உள்ளார்.
ஜேம்ஸ் பாண்ட், டாம் க்ரூஸ் உள்ளிட்டோரின் ஹாலிவுட் அதிரடி படங்களை பார்த்து வியந்து ரசித்தவர்களுக்கு, பதான் ஒரு மெகா விருந்து.
இந்தியாவின் உளவாளியாக இருக்கும் ஜான் ஆபிரகாம், ஒரு கட்டத்தில் தேசத்துக்கு எதிராக மாறுகிறார். இந்தியாவை அழிக்க புறப்படுகிறார் இன்னொரு உளவாளியான ஷாருக்கான். ஆனால் அவரை தனது காதல் வலையில் வீழ்த்துகிறார் தீபிகா படுகோன். இதனால் ஷாருக்கான் தடுமாறி, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலை.
இந்த இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு, மீளும் அவர், ஜான் ஆபிரகாமை துரத்தி துரத்தி அடித்து உதைத்து, இந்தியாவுக்கு எதிரான சதியை முறியடிப்பதே கதை.
8 பேக்ஸ் உடம்புடன் ஷாருக்கான் மிரட்டுகிறார். இன்னொரு பக்கம், ஜான் ஆபிரகாமும் தனது கட்டுடல் காட்டி அதிரடிக்கிறார். இருவரும் ரசிகைகளை கவர்வார்கள் என்பது உறுதி.
இவர்களுக்கு தான் சளைத்தவர் இல்லை என தீபிகா படுகோன், பிகினி உடையில் உலா வருகிறார். இது ரசிகர்களுக்கு விருந்து.
அதிரடி ஆக்சனில் மட்டுமின்றி, சென்ட்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார் ஷாரூக்கான். அதே போல ஜான் ஆபிரகாம், உண்மையிலேயே கொடூர வில்லனோ என நினைக்கும் அளவுக்கு மிரட்டி இருக்கிறார்.
தீபிகா படுகோன் கவர்ச்சியில் மட்டுமல்ல.. சண்டைக் காட்சியிலும் தூள் பறத்துகிறார்.
ஓடும் ரயிலில் சண்டை.. ஹெலிகாப்டரில் சண்டை, மலை உச்சியில் சண்டை.. என படம் முழுதும் சண்டைதான். ஆனால் ஸ்பெயின், ரஷ்யா என பல நாடுகளில் அசரடிக்கும் லோகேஷன்களில் படத்தை எடுத்து, நம்மை மயக்கி விடுகிறார்கள்.
சண்டைக் காட்சி மட்டுமின்றி அதை சிறப்பாக படமாக்கிய ஒளிப்பதிவாளரையும் பாராட்ட வேண்டும்.
மற்றபடி நம்ப முடியாத காட்சிகள்தான்.

தவிர, ஆபாச வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
ஷாருக்கான், தீபிகா படுகோனிடம், “நீ ஒரு பாம். அதில் பிளாஸ்ட் ஆக நான் ரெடி” என்கிறார்.
இன்னொரு இடத்தில் பூபிள்ஸ் என்று கூறுகிறார்.
மொத்தத்தில் லாஜிக் இலாவிட்டாலும், தனது திரைக்கதை மேஜிக்கால் ரசிக்கவைத்து விடுகிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.
சிறுவயதில் காமிக்ஸ், பிறகு ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்து ரசித்தவர்கள் இப்படத்தை ரசிக்கலாம்.